
புதிதாக 15 அமைச்சர்கள் நியமனம்
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2019ம் ஆண்டில் முதல்வராக பதவி பொறுப்பேற்ற பின்னர், அப்போது ஜெகன் அமைச்சரவையில் 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால், இரண்டரை ஆண்டுகள் மட்டுமே இந்த அமைச்சர்கள் பதவி வகிப்பர் என்றும், அதன் பின்னர் புதியவர்களுக்கு மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் வாய்ப்பு வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது. தற்போது கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் நெருங்குவதால், புதிய அமைச்சரவையை நியமனம் செய்ய முதல்வர் ஜெகன் தீர்மானித்தார். தற்போது நான்கு மாதங்கள் தாமதமாக அமைச்சரவை விரிவாக்க பணியை ஜெகன்மோகன் ரெட்டி மேற்கொண்டார். இதையடுத்து கடந்த வாரம் அனைத்து அமைச்சர்களின் ராஜினாமா களை ஜெகன்மோகன் ரெட்டி பெற்றுக்கொண்டார். ஏற்கனவே இருந்த மந்திரிகளில் அனுபவம் வாய்ந்த பத்து பேரோடு புதிதாக 15 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
நடிகை ரோஜவிற்கும் அமைச்சர் பதவி
புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சர்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு இத்தகவலை தெரிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் பெயர்களையும் அவர் தெரிவித்தார். அதில் நகரி எம்எல்ஏ நடிகை ரோஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து நகரியில் தொண்டர்கள் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சிலை அருகிலும் நகரியில் உள்ள ரோஜாவின் வீட்டின் அருகிலும் கட்சி அலுவலகத்தின் முன்னும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் 70% பேர் பி.ஸி, எஸ்.ஸி, எஸ்.டி, மைனாரிட்டி வகுப்பைச் சேர்ந்தவர்களே இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ரோஜா உள்துறை அமைச்சரா?
பழைய அமைச்சர்களில் ஆதி மூலபு சுரேஷ், பெத்திரெட்டி ராம சந்திரா ரெட்டி, நாராயணசாமி, பி. சத்யநாராயணா, ஜெயராம், அம்பாட்டி ராம்பாபு, ராஜேந்திரநாத் ரெட்டி, விஸ்வரூப், அப்பல ராஜு, வேணுகோபால கிருஷ்ணா, அம்ஜத் பாஷா ஆகியோ ருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. 25 பேரில் 17 பேர் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இந்தநிலையில் இன்று காலை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்கவுள்ளனர். இதனிடையே யாருக்கு என்ன பொறுப்பு என்று இதுவரை அறிவிக்காத நிலையில் நகரி தொகுதி எம்.எல்.ஏ ரோஜாவிற்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக விக்கிபீடியாவில் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தகவலை பார்த்த ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே நடிகை ரோஜாவின் ஆதரவாளர்கள் தான் விக்கிபீடியாவில் உள்துறை அமைச்சர் என மாற்றி இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.