இனி இந்தியா முழுவதும் திராவிட மாடல்.. ஆதிக்க வெறி பொய் மூட்டைகளை எங்களிடம் உருட்ட வேண்டாம்.. ஸ்டாலின் விளாசல்!

Published : Apr 11, 2022, 08:09 AM IST
இனி இந்தியா முழுவதும் திராவிட மாடல்.. ஆதிக்க வெறி பொய் மூட்டைகளை எங்களிடம் உருட்ட வேண்டாம்.. ஸ்டாலின் விளாசல்!

சுருக்கம்

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் நமக்கு இந்தியாவின் பன்முகத்தன்மையை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. நம்முடைய சமூகநீதியை மற்ற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி இருக்கிறது. 

ஆதிக்க வெறியில் கட்டிய பொய் மூட்டைகளை எங்களிடம் உருட்ட வேண்டாம். காலங்காலமாக உங்களின் பொய்களை உடைத்தெறிந்த இயக்கம் திராவிட இயக்கம் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பேசினார்.

வரிசையாக தேர்தல் வெற்றி

தமிழக அரசின் பட்ஜெட் விளக்ககியும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசினார். “நாடாளுமன்றத் தேர்தலா? திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றி.  ஊரக உள்ளாட்சித் தேர்தலா? திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றி.  சட்டப்பேரவைத் தேர்தலா? திமுக கோட்டையைக் கைப்பற்றியது! நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலா? திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றி! இத்தகைய வெற்றிச் செய்திகள் மட்டுமே நம்முடைய காதில் விழும் அளவுக்கு பணியாற்றிய லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் அனைவருக்கும் - என்னுடைய இதயத்தின் அடியாளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவுக்கு வாக்களித்தால் நன்மை செய்வார்கள், பல்வேறு திட்டங்களை உருவாக்கிக் கொடுப்பார்கள், கூப்பிட்ட குரலுக்கு செவிமடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1976 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி கலைக்கப்பட்ட போது, மதுராந்தகத்தில் தான் 'வெற்றி நமதே' நாடகம் அரங்கேற்றுவதற்காக வந்திருந்தேன். ஆட்சி கலைக்கப்பட்டது என்று தெரிந்ததும் - நாடகம் நடத்தப்படவில்லை. சென்னை திரும்பினேன். மிசா சட்டத்தின் படி கைது செய்யப்பட்டேன். சிறையில் அடைக்கப்பட்டேன். சிறையில் அடைக்கப்பட்டேன் என்று சொல்வதை விட மக்களின் இதய சிறையில் நான் அன்று முதல் அடைக்கப்பட்டேன். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகுதான் முழுமையான அரசியலுக்கு என்னை நான் ஒப்படைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றி வரத் தொடங்கினேன். இன்றைய தினம் தமிழ்நாட்டு மக்களால் முதலமைச்சராக அமர வைக்கப்பட்டு இருக்கிறேன் என்றால் அதற்கு அடித்தளம் அமைத்த ஊர் மதுராந்தகம். இத்தகைய தியாக வரலாற்றுக்கு நாம் சொந்தக்காரர்கள்.

தமிழகத்தை தலைநிமிர செய்வோம்

1967 முதல் இன்று வரை இந்த 55 ஆண்டு காலத்தில் ஆறுமுறை ஆட்சியில் அமர்ந்துள்ளோம். பல தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். வெற்றி பெற்றபோது மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம். எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது மக்களுக்காக போராடி வந்துள்ளோம். வெற்றி நமது கண்ணை மறைத்ததும் இல்லை - தோல்வி நம்மை சோர்வடையச் செய்ததும் இல்லை. நாம் எப்போதும் மக்களோடு மக்களாக இருக்கிறோம். அதனால் தான் மக்கள் நம்மோடு இருக்கிறார்கள். அதன் அடையாளம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் இன்று ஆளும்கட்சியாக அமர வைக்கப்பட்டு இருப்பது ஆகும்.

இந்தக் கூட்டத்தின் வாயிலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது - நீங்கள் அனைவரும் மக்களோடு மக்களாக இருங்கள் என்பதுதான். இந்தப் பிணைப்புதான் கழகத்தை வாழ வைக்கும், வளர வைக்கும், தமிழ்நாட்டைச் செழிக்க வைக்கும், தமிழ்நாட்டைத் தலைநிமிர வைக்கும். தமிழ்நாட்டை தலைநிமிர வைத்துக் கொண்டு இருக்கிறோம். பத்தாண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழகத்தை பத்து மாதத்தில் தலைநிமிர வைத்துள்ளோம் என்பதை இந்த மறைமலை நகரில் நின்று தலைநிமிர்ந்து நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தியா முழுமைக்கும் திராவிட விதை

தமிழகம் தலைநிமிரும் என்பது மட்டுமல்ல - தலைசிறந்த மாநிலமாக -இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரு தாய்க்குத்தான் தனது பிள்ளைக்கு என்னவெல்லாம் வேண்டும் என்று தெரியும். தன்னிடம் படிக்கும் பிள்ளைகள் அனைவரும் மிகச்சிறந்த உயர்வை அடைய வேண்டும் என்ற அக்கறை ஒரு ஆசிரியருக்குத் தான் இருக்கும். தன்னிடம் அறிவுரை கேட்டுவந்தவருக்கு தேவையான மிகச்சிறந்த அறிவுரையை தனது கூர்மையான அறிவுடன் அந்த வழிகாட்டி செய்து கொடுப்பார். ஒரு சீர்திருத்தவாதி தான் மனித சமுதாயத்துக்கு எது தேவையோ அதை யாருக்கும் பயப்படாமல் சொல்வார். இவை நான்கு தன்மைகளும் கொண்ட அறிக்கையாக கழக அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என்று நான் சொன்னேன்.

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் நமக்கு இந்தியாவின் பன்முகத்தன்மையை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. நம்முடைய சமூகநீதியை மற்ற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி இருக்கிறது. நம்முடைய மாநில சுயாட்சியை மற்ற மாநிலங்களும் பேசத் தொடங்கி இருக்கிறது. நாம் இதுவரை பேசிய மொழி உரிமையை பிற மாநிலத் தலைவர்களும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். நம்முடைய பல்வேறு திட்டங்களை, பிறமாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தத் தொடங்கி இருக்கிறது. தமிழக மக்களுக்கு உன்னதமான நல்லாட்சியைக் கொடுத்துவரும் நாம் - நம்முடைய திராவிடவியல் தத்துவத்தை இந்தியா முழுமைக்கும் விதைக்கும் கடமையையும் செய்வோம்.

இதுதான் திராவிட மாடல்

திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அனைவருக்கும் கல்வியைக் கொடுப்போம். பள்ளிக் கல்வியை மட்டுமல்ல, கல்லூரிக் கல்வியை மட்டுமல்ல, உயர்கல்வியும் கொடுப்போம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. அனைவர்க்கும் வேலை கொடுப்போம். ஏதோ ஒரு வேலை அல்ல, அவர்களது தகுதிக்கு ஏற்ற வேலையைக் கொடுப்போம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. அனைவருக்கும் உரிய மருத்துவ வசதியை அளிப்போம். அவர்கள் அந்த மருத்துவ வசதியைத் தேடி வர வேண்டியது இல்லை. அவர்கள் இருக்கும் இடத்துக்கே வந்து கொடுப்போம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, இருளர் மற்றும் நரிக்குறவர் போன்ற விளிம்பு நிலை மக்களுக்குமான ஆட்சியை நடத்துவோம். அதுவும் சமூகநீதி ஆட்சியை நடத்துவோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. குறிப்பிட்ட துறைகள் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளும் சிறப்பாகச் செயல்படுவதுதான் திராவிட மாடல் ஆட்சி. நகரங்களை மட்டுமல்ல கிராமங்களையும் முன்னேற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சி.

குறிப்பிட்ட மாவட்டம் மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களும் வளர்வதுதான் திராவிட மாடல் ஆட்சி. எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பது - கிடைக்க வைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஆகவே, ஆதிக்க வெறியில் கட்டிய பொய் மூட்டைகளை எங்களிடம் உருட்ட வேண்டாம். காலங்காலமாக உங்களின் பொய்களை உடைத்தெறிந்த இயக்கம் திராவிட இயக்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்!” என்று ஸ்டாலின் பேசினார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!