அரசு வாகனம் வேண்டாம்... எனது டூவீலர் போதும்... - எம்.எல்.ஏவுக்கும் அமைச்சருக்குமிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு

First Published Mar 14, 2017, 6:32 PM IST
Highlights
Do not ... enough ... My tuvilar government vehicle - Clashes amaiccarukkumitaiye sensation to MLA


புதுச்சேரியில் எம்.எல்.ஏவுக்கும் அமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அரசுவாகனத்தை கழகத்தில்  ஒப்படைத்துவிட்டு எம்.எல்.ஏ பாலன் தனது டூவீலரில் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதால் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றது. இதில், அமைச்சர் பதவி மற்றும் அரசு பதவிகள் கிடைக்காத எம்.எல்.ஏ.க்களுக்கு  வாரிய தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.

அதன்படி புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவராக எம்.எல்.ஏ. எம்.என்.ஆர். பாலன் நியமிக்கப்பட்டார். இந்த துறையின் அமைச்சராக மல்லாடி கிருஷ்ணாராவ் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கும், எம்.என்.ஆர். பாலனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து மல்லாடி கிருஷ்ணாராவ் செயல்கள் குறித்து எம்.எல்.ஏ பாலன் புகார் அளித்தார். மேலும் சுற்றுலா வளர்ச்சிகழக துறை அரசு வாகனத்தையும் கழகத்தில் ஒப்படைத்தார்.

பின்னர், பாலன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

எனக்கு தெரியாமல் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் பல்வேறு முறைகேடுகளை புரிந்து வருகிறார்.

நோனாங்குப்பம் படகு இல்லத்திற்கு தேவையான படகுகள் இருக்கும் போது ரூ.1.5 கோடி செலவில் 2 புதிய படகுகள் வாங்குவதற்கு என்ன அவசியம் தெரியவில்லை.

தேவையில்லாமல் பல பூமி பூஜைகள் நடக்கின்றன. சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து முதல்வர் நாராயணசாமியிடம் புகார் தெரிவித்துள்ளேன்.

நடவடிக்கை எடுத்தால் வாரியத் தலைவர் பதவியில் நீடிப்பேன் என்றும், இல்லையென்றால் பேரவை உறுப்பினர் பதவியில் மட்டும் இருந்து மக்களுக்கு பணியாற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து வாரியதலைவர் காரில் செல்லாமல் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பாலன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வந்த பாலன் எம்.எல்.ஏ.வை, நாராயணசாமி சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!