தலையை கொடுத்தாவது தமிழகத்தை திமுக பாதுகாக்கும்.. பாஜகவிற்கு எதிராக எரிமலையாய் வெடித்த ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Mar 25, 2021, 3:19 PM IST
Highlights

50 ஆண்டுகளாக பார்த்து பார்த்து பாதுகாக்கப்பட்ட தமிழகத்தை பாஜகவினர் சிதைக்கப் பார்க்கிறார்கள். தலையை கொடுத்தாவது தமிழகத்தை திமுக மற்றும் எனது ஆட்சி பாதுகாக்கும்  என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

50 ஆண்டுகளாக பார்த்து பார்த்து பாதுகாக்கப்பட்ட தமிழகத்தை பாஜகவினர் சிதைக்கப் பார்க்கிறார்கள். தலையை கொடுத்தாவது தமிழகத்தை திமுக மற்றும் எனது ஆட்சி பாதுகாக்கும்  என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் எ.வ.வேலு (திருவண்ணாமலை), பிச்சாண்டி (கீழ்பென்னாத்தூர்), கிரி (செங்கம்), சரவணன் (கலசப்பாக்கம்), சேகரன் (போளூர்), அன்பழகன் (ஆரணி), ஜோதி (செய்யாறு), அம்பேத்குமார் (வந்தவாசி) ஆகியோரை ஆதரித்து, திருவண்ணாமலை காந்தி சிலை அருகே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது;- திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, இந்துக்கள் விரோதி திமுக என மற்ற கட்சிகள் பிரச்சாரம் செய்கிறது. யாருடைய நம்பிக்கைக்கும் இடையூறாக திமுக இருப்பது கிடையாது. அனைவரது உணர்வுக்கும் அமைய உள்ள எனது அரசு மதிப்பளிக்கும். அனைவரையும் மதித்துதான் என்னுடைய ஆட்சி இருக்கும் என்ற உறுதிமொழியை அளிக்கிறேன்.

மத உணர்வுகளை தூண்டுபவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, இது தமிழ்நாடு. அரசியல் வேறு, ஆன்மிகம் வேறு என்ற தெளிவு கொண்டவர்கள் தமிழ் மக்கள். இதனை பாஜக புரிந்து கொள்ள 100 ஆண்டுகளாகும். அவர்கள் யோசிக்க மாட்டார்கள், சிந்திக்கவும் மாட்டார்கள். பாஜக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியல் இந்தியில் உள்ளது. இந்தி மொழி பேசும் மக்களுக்கான ஆட்சிதான் பாஜக. இந்தி மொழியை தமிழகத்தில் திணிப்பது, இந்தி மொழி பேசுபவர்களை தமிழகத்தில் நுழைப்பதன் மூலம் பாஜகவை வளர்த்துவிடலாம் என சூழ்ச்சி செய்து வருகிறார்கள். இதற்கு முதல்வர் பழனிசாமி வேடிக்கை பார்க்கலாம். திமுகவும், தமிழக மக்களும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.

50 ஆண்டுகளாக பார்த்து பார்த்து பாதுகாக்கப்பட்ட தமிழகத்தை சிதைக்கப் பார்க்கிறார்கள். தலையை கொடுத்தாவது தமிழகத்தை திமுக மற்றும் எனது ஆட்சி பாதுகாக்கும். பதவியில் உட்கார வேண்டும் என்பதற்காக ஆட்சிக்கு வர வேண்டும் என சொல்லவில்லை. ஆட்சியில் இருந்தால்தான் தமிழகத்துக்கு எதிராக நடைபெறும் செயல்களை தடுக்க முடியும். தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும். இதனை தேர்தல் என கருத வேண்டாம். நம்முடைய கொள்கையை காப்பாற்றவும் மற்றும் கட்டமைக்கப்பட்டுள்ள தமிழகத்தைக் காப்பாற்றவும் நடக்கும் போர். இந்த போரில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதுதான் நம்முடைய குறிக்கோள்.

தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற போவதில்லை. அதேபோல், அதிமுகவும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்று விடக்கூடாது. ஒரு அதிமுக எம்எல்ஏ வெற்றிபெற்றால், அவர் அதிமுக எம்எல்ஏவாக இருக்கமாட்டார். பாஜக எம்எல்ஏவாக இருப்பார். இதற்கு உதாரணம், நாடாளுமன்ற தேர்தலில் ஓரே இடத்தில் வெற்றி பெற்ற துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன், அதிமுக எம்.பி-யாக இல்லாமல் பாஜக எம்.பி-யாக இருக்கிறார். அவரது லெட்டர் பேடில், கட்சியின் தலைவர் படத்தை போடாமல், பிரதமர் மோடியின் படத்தை போட்டுள்ளார். பாஜகவின் அடிமையாக செயல்படுகிறார். அதனால்தான் 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!