தோல்வி பயத்தில் தடுமாறுது திமுக.. காய்ச்சியெடுக்கும் கராத்தே தியாகராஜன்.

By Ezhilarasan BabuFirst Published Mar 25, 2021, 2:37 PM IST
Highlights

இந்த தபால் வாக்குப்பதிவு முறை தங்கள் கட்சியை பொறுத்தவரை முழு நிறைவோடும், பாதுகாப்போடும் இந்திய தேர்தல் ஆணைய விதிக்கு உட்பட்டு சரியாக இருப்பதாக கூறினார்.

திமுகவினர் தோல்வி பயத்தில் இன்று நடைபெற இருந்த தபால் ஓட்டு வாக்கு பதிவினை நிறுத்தி வைக்க நீதிமன்றம் சென்றுள்ளதாக பாஜகவில் இணைந்துள்ள கராத்தே தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வீட்டிலேயே சென்று சேகரிப்பதற்கான வழி முறையை தேர்தல் ஆணையம் 12 டி என்ற படிவம் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது. 

அந்த வகையில் வாக்கு சேகரிக்கும் முறை சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. மொத்தம் 7300 பேர் தபாலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த 12 டி  முறையிலான வாக்குப்பதிவே வேண்டாம் என வலியுறுத்தி திமுக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது அதில், இதுவரை எத்தனை பேர் தபால் மூலம் வாக்களிக்க உள்ளனர் என்பது குறித்தும், அவர்களின் விவரங்கள் குறித்தும் தேர்தல் ஆணையம் அங்கிகரிக்கப் பட்ட கட்சிகளுக்கு தெரிவிக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளது. இதனையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஆணையர் பிரகாஷ் இன்று அங்கீகரிக்கப்பட்ட  அனைத்து கட்சி பிரமுகர்களையும் அழைத்து இந்த வாக்கு பதிவு குறித்த விளக்கம் அளித்தார். 

இந்நிலையில் அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக சார்பில் கலந்துகொண்ட கராத்தே தியாகராஜன் மற்றும் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பால் கனகராஜ் ஆகிய இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கராத்தே தியாகராஜன், இந்த தபால் வாக்குப்பதிவு முறை தங்கள் கட்சியை பொறுத்தவரை முழு நிறைவோடும், பாதுகாப்போடும் இந்திய தேர்தல் ஆணைய விதிக்கு உட்பட்டு சரியாக இருப்பதாக கூறினார். மேலும் திமுக தோல்வி பயத்தில்  இந்த தபால் வாக்கினை தடுப்பதாகவும், தங்களை பொருத்தவரை இது முழுவதும் திருப்தியாக இருப்பதாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் பிற கட்சிகளுக்கும் இந்த தபால் வாக்குப்பதிவு குறித்து எந்த சந்தேகமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
 

click me!