எ.வ.வேலு வீட்டில் 2வது நாளாக தொடரும் ஐ.டி.ரெய்டு... பதறியடித்துக் கொண்டு டெல்லி விரைந்த திமுக எம்.பி...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 26, 2021, 12:33 PM IST
Highlights

எங்கே பணப்பட்டுவாடா விவகாரம் வெளியே வந்துவிடுமோ? என அஞ்சிய திமுக தற்போது டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையினரும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள், வேட்பாளர்கள் வீடு மற்றும் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரிச்சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தாராபுரத்தில் திமுக, மதிமுக நிர்வாகிகளின் வீடுகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த மார்ச் 17ம் தேதி  மதிமுக மாவட்டத் துணைச் செயலாளரும், தொழிலதிபருமான கவின் நாகராஜ் வீட்டிலும், அன்று மாலை 4 மணியளவில் திமுக நகரச் செயலாளர் கே.எஸ்.தனசேகரன் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. இதைக்கேள்விப்பட்டு கட்சி தொண்டர்கள் அங்கு குவிந்ததால் பதற்றமான சூழ்நிலை உருவானது. தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என்பதால் அதை திசை திருப்பும் முயற்சியாக வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்படுவது அக்கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து கொண்டிருந்த அதே சமயத்தில், திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும், அந்த தொகுதி திமுக வேட்பாளருமான எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், கல்லூரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான  வரித்துறையினர் சோதனை நடத்தினர். இன்று 2வது நாளாக சோதனை தொடர்ந்து வரும் நிலையில், எ.வ.வேலு பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். 

எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையை ஆரம்பித்ததில் இருந்தே திமுகவில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இது பழிவாங்கும் நடவடிக்கை, இந்த உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் அச்சமாட்டோம் என திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கான மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் கொந்தளிப்புடன் அறிக்கை வெளியிட்டனர். 

எங்கே பணப்பட்டுவாடா விவகாரம் வெளியே வந்துவிடுமோ? என அஞ்சிய திமுக தற்போது டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. திமுக வேட்பாளர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் திட்டமிட்டு வேண்டுமென்றே திமுக நிர்வாகிகள் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படுவதாக திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் புகார் மனு அளித்துள்ளார். 

click me!