புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு சட்டவிரோதமானது.. மத்திய அரசு நீதிமன்றத்தில் பதில்.

By Ezhilarasan BabuFirst Published Mar 26, 2021, 12:16 PM IST
Highlights

மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க புதுவை அமைச்சரவையின் முடிவு  சட்டவிரோதம் என்பதால் அதனை நிராகரித்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க புதுவை அமைச்சரவையின் முடிவு  சட்டவிரோதம் என்பதால் அதனை நிராகரித்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்க கூடிய மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதேபோல் புதுவை மாநிலத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது. ஆனால் இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில புதுவை சேர்ந்த மாணவி திவ்யதர்ஷினி என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், புதுவை மாநிலத்தில் மருத்துவப் படிப்பில் சேர கூடிய அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். 

 

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன்பு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் உள்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஒரே நாடு ஒரே தகுதி என்ற அடிப்படையில் நீட்தேர்வு கொண்டுவரப்பட்டதாகவும், ஆனால் புதுவை அமைச்சரவையின் முடிவு  என்பது நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப் போகச் செய்யும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் தொடர்பாக தங்களது கவனத்திற்கு கொண்டு வரப்பட வில்லை என்றும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புதுவை அரசின் அமைச்சரவை தீர்மானம் சட்டவிரோதமானது என்றும், புதுவை அமைச்சரவை முடிவு நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு மாணவர் தரப்பில் ஆஜரான  மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் நலனுக்கு எதிரானது என்றும், உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது என்றும் தெரிவித்தார். மத்திய அரசினுடைய முடிவு சமூக நீதிக்கு எதிரானது என்றும் வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

click me!