
கவர்னரை அளவுக்கு அதிகமாக எதிர்ப்பதன் மூலம் தமிழக மக்களின் மத்தியில் கடும் அதிருப்தியை சம்பாதிக்க துவங்கியிருக்கிறது தி.மு.க. என்கிறார்கள் விமர்சகர்கள்.
இது பற்றி மேலும் பேசுபவர்கள்...
‘ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை’ என்ற அண்ணாவின் வழி வந்ததுதான் தி.மு.க. ஆனால் அரசியல் சித்தாந்தங்கள் எப்போதும் நிலையாக இருப்பதில்லை. கால சூழலுக்கு ஏற்ப, மக்களின் நலனுக்குகாக சித்தாந்தங்களை மாற்றிக் கொள்வதில் தவறில்லை. இது அரசியல் பாதையில் காலங்காலமாக பின்பற்றப்படும் யதார்த்தமும் கூட.
தற்போது தமிழக கவர்னராக இருக்கும் பன்வாரிலால் புரோஹித் பழைய கவர்னர்கள் போல், தமிழக அரசின் செயல்களுக்கெல்லாம் ஆமாம் சாமி! போடும் தலையாட்டி பொம்மையாக இல்லை. மக்கள் வரிப்பணத்தில் வளமான வாழ்க்கையை வாழ்ந்து செல்பவரும் இல்லை. அரசியல் சாசனம் தனக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்துக்கு உட்பட்டு மாவட்டங்கள்தோறும் ஆய்வுப்பணிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை, தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு என்று செயல்படுகிறார். தமிழக அரசியல் கட்சிகளிடையே இது எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
ஆனால் பி.ஜே.பி.யின் கையில் தங்கள் லகானை கொடுத்திருக்கும் அ.தி.மு.க. அரசால் கவர்னரை எதிர்க்க முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தி.மு.க. ‘மாநில சுயாட்சி’ தத்துவத்தை சொல்லி கவர்னரை வெகுவாக எதிர்க்கிறது.
இந்நிலையில் மக்கள் தமிழக கவர்னரின் செயல்களில் அதிருப்திக் கொள்கின்றனரா? என்று பார்த்தோமேயானால், நிச்சயமாக இல்லை. சொல்லப்போனால் அவரை நேசிக்கின்றனர்.
அடிக்கடி பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் போவதன் மூலம் அந்தந்த மாவட்டங்களில் தூய்மைப்பணிகளை மாவட்ட நிர்வாகம் விறுவிறுவென நடத்துகிறது. தனக்கும் மக்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை, என்றில்லாமல் வெகுஜனத்திடம் வெகுவாய் இறங்கி வந்து பழகி அவர்களின் குறைகளை கேட்கிறார் கவர்னர். ஊட்டி ஹெச்.பி.எஃப். ஆலையின் ஊழியர்களின் பிரச்னைகளுக்கு செவி மடுத்திருக்கிறார், கரும்பு விவசாயிகளின் பிரச்னைகளை தைப் பொங்கலுக்குள் தீர்ப்பதாக சொல்லியிருக்கிறார், திருநெல்வேலிக்கு சுற்றுப்பயணம் சென்ற அவர் சட்டென அங்கிருந்து குமரி சென்று ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் . ஆனால் தமிழக முதல்வரான எடப்பாடியாரோ 13 நாட்கள் கழித்துத்தான் குமரிக்கு சென்றார் என்பதை இந்த நேரத்தில் நினைவில் கொள்க.
ஆளும் அ.தி.மு.க. அரசாங்கத்தை ‘கோமாவில் இருக்கும் அரசு’ என்று விமர்சிக்கிறார் ஸ்டாலின். இந்த சூழலில் அரசை கேள்வி கேட்கும் அதிகாரம் படைத்த கவர்னரானவர் மக்கள் பணிகளை செய்வதில் தி.மு.க.வுக்கு என்ன பிரச்னை வந்துவிட்டது?
இன்று தஞ்சாவூர் சென்ற கவர்னரை தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி எதிர்த்ததும், கறுப்புக் கொடியை அவரது கான்வாயை நோக்கி வீசியதும் அசிங்கம்.
இந்த செயல்களின் மூலம் மக்கள் மத்தியில் சரிந்து கொண்டிருக்கும் தங்கள் செல்வாக்கின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்திகிறார் ஸ்டாலின்.” என்கிறார்கள்.
கவனிக்க வேண்டிய விஷயம்தான்!