திமுக ஆட்சியில் எம்.எல்.ஏக்களுக்கே பாதுகாப்பு இல்லை.. மக்களுக்கு எப்படி இருக்கும்..? சீரிய எஸ்.பி.வேலுமணி

By Raghupati RFirst Published Dec 22, 2021, 7:36 AM IST
Highlights

திமுக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பு இல்லை. மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான  எஸ்.பி.வேலுமணி.

பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவரை நோக்கி செருப்பு வீசப்பட்டது. இதனை கண்டித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியதாவது, ‘கிணத்துக்கடவு தாலுக்காவிற்கு உட்பட்ட கோதவாடி கிராமத்தில், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கின்றேன்.இது மிகவும் தவறான முன்னுதாரணம் ஆகும். அதிமுக ஆட்சியில் குடிமராமத்து பணிகள் மூலம் சீர் செய்யப்பட்ட குளத்தில், பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும். 

திமுக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பு இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதை முதலமைச்சர் உறுதி செய்து, தன்னுடைய கட்சிக்காரர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும்’ என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, பொள்ளாச்சி சட்டமன்றத்‌ தொகுதிக்கு உட்பட்ட கிணத்துக்கடவு தாலுக்கா, கோதவாடி பஞ்சாயத்தில்‌ சுமார்‌ 300 ஏக்கர்‌ பரப்பளவில்‌ உள்ள கோதவாடி குளம்‌ 50 ஆண்டுகளாக புதர்‌ மண்டி, குளம்‌ இருக்கும்‌ இடமே தெரியாமல்‌ இருந்தது. 

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்‌ என்ற முறையில்‌, முனைவர்‌ பொள்ளாச்சி ஜெயராமன்‌ அவர்களுடைய முயற்சியின்‌ காரணமாக, அம்மாவின்‌ அரசில்‌, 2017-2018 ஆம்‌ ஆண்டு குடிமராமத்துத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, கோதவாடி குளம்‌ தூர்‌ வாருவதற்கு 25 லட்சம்‌ ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கிராம மக்களின்‌ பங்களிப்புடன்‌ குளம்‌ மற்றும்‌ வரத்துக்‌ கால்வாய்‌ ஆகியவை தூர்‌ வாரப்பட்டன. இதனால்‌ ஆண்டுதோறும்‌, மழை நீர்‌ வரத்துக்‌ கால்வாய்‌ மூலம்‌ குளத்தை வந்தடைந்தது. கடந்த வாரம்‌ பெய்த தொடர்‌ மழையின்‌ காரணமாக, கோதவாடி குளம்‌ நேற்று இரவு நிரம்பி, அக்கிராம மக்களை மகிழ்ச்சிக்‌ கடலில்‌ ஆழ்த்தியது. 

பொள்ளாச்சி ஜெயராமனும், மக்களின்‌ அழைப்பை ஏற்று வருண பகவானுக்கு நன்றி செலுத்தும்‌ நிகழ்ச்சியில்‌ கலந்துகொள்ள இன்று காலை 11 மணிக்கு கோதவாடி கிராமத்திற்குச்‌ சென்றுள்ளார்‌. அப்போது அப்பகுதியைச்‌ சேர்ந்த ஒன்றியச்‌ செயலாளர்‌, முனைவர்‌ பொள்ளாச்சி ஜெயராமன்‌ அவர்களை முன்னிருத்தி பொங்கல்‌ வைக்கக்கூடாது என்று கிராம மக்களை மிரட்டியுள்ளார்‌. இந்த மிரட்டலுக்கு பயப்படாத அக்கிராம மக்கள்‌ வருண பகவானுக்கும்‌, குளத்துக்கரை அம்மனுக்கும்‌ பொங்கல்‌ வைத்து நிகழ்ச்சியினை சீரும்‌ சிறப்புமாக கொண்டாடி வந்தனர்‌. 

இந்நிகழ்ச்சியில்‌ முனைவர்‌ பொள்ளாச்சி ஜெயராமனும்‌ பங்கேற்று சிறப்பித்துக்‌ கொண்டிருக்கும்‌ வேளையில்‌ அங்கு வந்த சிலர் பொள்ளாச்சி ஜெயராமன்‌ மீதும்‌, அங்கிருந்த பொதுமக்கள்‌ மீதும்‌ கொலைவெறித்‌ தாக்குதல்‌ நடத்தியதோடு, பொங்கல்‌ வைத்து வழிபட்ட பெண்களை ஆபாசமாகப்‌ பேசி தாக்குதலில்‌ ஈடுபட்டனர்‌. இச்செயலை அங்கிருந்த காவல்‌ துணை கண்காணிப்பாளர்‌ தலைமையிலான காவல்‌ துறையினர்‌ வேடிக்கை பார்த்ததோடு, அங்கு போடப்பட்டிருந்த சாமியானா பந்தல்‌ மற்றும்‌ சேர்களை பறிமுதல்‌ செய்துள்ளனர்‌. 

பொள்ளாச்சி ஜெயராமன்‌ பட்டப்‌ பகலில்‌, காவல்‌ துறையினரின்‌ முன்னிலையிலேயே தாக்கப்படுகிறார்‌ என்றால்‌, சாதாரண, சாமான்ய மக்களின்‌ நிலை என்ன என்பதை எண்ணிப்‌ பார்க்கவே முடியவில்லை. இந்த விடியா அரசு ஆட்சிப்‌ பொறுப்பேற்றதில்‌ இருந்தே, சாமான்ய மக்கள்‌, அதிகாரிகள்‌ தொடர்ந்து தாக்குதலுக்குட்பட்டு வருகின்றனர்‌. கொலை, கொள்ளை, பாலியல்‌ வக்கிரங்கள்‌ நாள்தோறும்‌ நடந்த வண்ணம்‌ உள்ளது.

மக்களைப்‌ பாதுகாக்க வேண்டிய காவலர்களே பல இடங்களில்‌ தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர்‌. அதே நேரத்தில்‌, திமுக-வினருக்கு ஏவல்‌ செய்யும்‌ அதிகாரிகள்‌ மற்றும்‌ காவல்‌ துறையினர்‌ முக்கியமான இடங்களில்‌ பணியமர்த்தப்படுகின்றனர்‌. அவர்களை முன்வைத்து தமிழகமெங்கும்‌ அதிகார துஷ்பிரயோகம்‌ தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்‌ தொடர்ச்சியாக இன்று சட்டமன்ற உறுப்பினரே, அவரது தொகுதியிலேயே தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார்‌. இந்த ஆளும்‌ கட்சியினரின்‌ வன்முறையை கடுமையாக கண்டிக்கிறேன்‌. இதுபோன்ற சட்டவிரோத செயல்களைத்‌ தடுத்து நிறுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ முன்னெடுக்கும்‌ என்று எச்சரிக்கிறேன்‌’ என்று தெரிவித்து இருக்கிறார்.

click me!