திமுகவில் எம்.ஜி.ஆர் இடத்தை பிடித்த சிஷ்யன் துரைமுருகன்!

By vinoth kumarFirst Published Aug 28, 2018, 12:17 PM IST
Highlights

திமுகவின் முதல் பொருளாளரான எம்.ஜி.ஆருக்கு பிறகு தற்போது அவரது சிஷ்யன் துரைமுருகன் புதிய பொருளாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக 1949-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டது.

திமுகவின் முதல் பொருளாளரான எம்.ஜி.ஆருக்கு பிறகு தற்போது அவரது சிஷ்யன் துரைமுருகன் புதிய பொருளாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக 1949-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டது. அப்போது அக்கட்சியின் முதல் பொருளாளராக மறைந்த எம்.ஜி.ஆர். நியமிக்கப்பட்டார். கட்சியின் வரவு, செலவு போன்ற கணக்கு வழக்கு போன்றவற்றை அவர் கவனித்து கொண்டு வந்தார். 

அண்ணா மறைந்த பிறகும் பொருளாளராக தொடர்ந்த எம்.ஜி.ஆருக்கும், தலைவர் கருணாநிதிக்கும் கணக்கு விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கட்சியின் கணக்கு வழக்குகளை முறையாக பின்பற்ற வேண்டும் என எம்.ஜி.ஆர். வலியுறுத்தியதால் அவர் திமுகவில் இருந்து விலகி அதிமுக என்ற புதிய கட்சியை தொடங்கினார். அதன்பிறகு திமுகவின் பொருளாளர் பதவியை மறைந்த சாதிக்பாஷா, ப.உ.சண்முகம் மற்றும் ஆற்காடு வீராசாமி ஆகியோர் வகித்து வந்தனர். இதையடுத்து அக்கட்சியின் பொருளாளர் பதவியை மு.க.ஸ்டாலின் வகித்து வந்தார். 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குன்றிய போது பொருளாளர் பதவியுடன், செயல் தலைவராகவும் ஸ்டாலின் பொறுப்பு வகித்து வந்தார். அதேநேரத்தில் திமுகவுக்கு புதிய பொருளாளர் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 7-ம் தேதி கருணாநிதி மறைந்தார். இதையடுத்து இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராகவும், துரைமுருகன் பொருளாளராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

புதிய பொருளாராக நியமிக்கப்பட்ட துரைமுருகன் திமுகவின் முதல் பொருளாளரான எம்.ஜி.ஆரின் தீவிர சிஷ்யனாக இருந்தவர். துரைமுருகனின் சிறு வயது முதல் அவரை படிக்க வைத்து வளர்த்தவர் எம்.ஜி.ஆர். தான். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர். புது கட்சி தொடங்கிய போதும் அவருடன் செல்லாமல் சாகும் வரை நான் திமுகவில் தான் இருப்பேன் என எம்.ஜி.ஆரிடமே சொல்லிவிட்டு கருணாநிதியின் பின்னால் சென்றவர் தான் இந்த துரைமுருகன். இன்று திமுகவில் எம்.ஜி.ஆர். வகித்த பொருளாளர் பதவியை தற்போது அவரது சிஷ்யன் துரைமுருகன் பெற்றுள்ளார். 

click me!