விளம்பரப் பிரியர் பிரதமர் மோடிக்கு, விளம்பர ஏஜெண்டாக யு.ஜி.சி. மாறியது ஏன்? பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செல்ஃபி பாயின்ட் அமைக்கும் அளவுக்கு கல்வியில் என்ன முன்னேற்றத்தை கொண்டு வந்தார் பிரதமர் மோடி? என திமுக மாணவர் அணி கேள்வி எழுப்பியுள்ளது.
மோடி "செல்ஃபி பாயிண்ட்"
திமுக மாணவர் அணிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமாப சி.வி.எம்.பி.எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழக மானிய குழு கடந்த 01.12.2023 அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகங்களில் பிரதமர் மோடியின் உருவத்துடன் கூடிய சுய புகைப்படம் (Selfie Point) எடுத்துக் கொள்ளும் "செல்ஃபி பாயிண்ட்" அமைப்பை ஏற்படுத்த அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையாகும்.
ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசால் கொண்டுவந்துள்ள தேசியக் கல்விக் கொள்கை 2020, பல்கலைக்கழக மானியக் குழுவின் அனைத்து அதிகாரங்களையும் பறிக்கும் சூழ்நிலை உள்ளநிலையில் அதனை செயல்படுத்த துடிக்கும் பிரதமர் மோடிக்கு சாமரம் வீசி, அவருக்கு விளம்பரம் தேடித்தரும் பணியில் பல்கலைக்கழக மானியக்குழு ஈடுபடுவது ஏன்? என்று கல்லூரி மாணவர்கள் கேள்வி எழுப்புவதை காது கொடுத்து கேட்டீர்களா?
பா.ஜ.க. அரசின் விளம்பர ஏஜெண்டாக எப்போது மாறியது?
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிலும் விளிம்பு நிலை மாணவர்களுக்கு வழங்கவேண்டிய மானியத்தை கடந்த பத்து ஆண்டுகளாக முறையாக வழங்காமல், அதனை படிப்படியாக குறைத்து விட்டு தற்போது பாசிச பா.ஜ.க. அரசின் விளம்பர ஏஜெண்டாக எப்போது மாறியது? எனவும் மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மாணவர்களின் கேள்வி உங்கள் காதுகளில் விழவில்லையா? பாசிச பா.ஜ.க. அரசின் சாதனைகளை பட்டியலிட வேண்டுமானால், பன்முகத் தன்மை வாய்ந்த இந்திய ஒன்றியத்தை காவியமாக்க துடிப்பது; இந்தியாவில் சிறுபான்மையினரை வாழவிடாமல் செய்யும் அனைத்து காரியங்களையும் முன்னிற்று செய்வது; சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகளை எதிர்கட்சியினர் மீது ஏவி அரசியல் செய்வது; இந்தியாவின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்ப்பது;
ஹிட்லர் வழியில் பாஜக
அதிமுக ஊழல் வாதிகளை ராஜ்பவன் மூலம் காப்பது என இப்படி அடுக்கடுக்காய் சொல்லிக்கொண்டே போகலாம் மோடி அரசின் சாதனைகளை... அதையெல்லாம் இளைய சமுதாயத்தினர் தெரிந்துக்கொண்டால், அவர்கள் மனதில் சாதிய தீண்டாமை எண்ணங்களே பெருகும்! இந்தியா வல்லரசு ஆகாது; வருங்கால சந்ததியினர் மத்தியில் வன்முறை எண்ணங்களை விதைக்கவே செய்யும். அதற்குதான் பல்கலைக்கழகங்களில் "செல்ஃபி' பாயின்ட் வைக்கச் சொல்லுகிறதா யூ.ஜி.சி ! இத்தாலியில் பாசிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு தலைமை வகித்த முசோலினியும், ஜெர்மனியில் நாஜி கட்சி ஆட்சிக்கு தலைமை வகித்த ஹிட்லரும் பல்கலைக்கழகங்களை, ஆய்வாளர்களை தங்களின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். வழியில், இந்தியாவில் பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு தலைமை வகிக்கும் மோடியும் அதையே செய்ய விரும்புகிறார்!
பெரியார் அம்பேத்கருக்கு செல்பி பாயிண்ட்
தமிழ்நாட்டு மாணவர்கள் விரும்புவதெல்லாம் திருவள்ளுவர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் உருவப்படங்களுடன் செல்ஃபி எடுக்க வேண்டுமென்பதே... கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் அனுமதி பெற்று, விரைவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி வளாகத்திலும் திருவள்ளுவர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் செல்ஃபி பாயின்ட் அமைக்க தி.மு.க. மாணவர் அணி தயாராக இருக்கிறது.
கல்லூரி வளாகத்தில் போராட்டம்
ஆகவே,பல்கலைக்கழகங்களில் பிரதமர் மோடியின் உருவம் கொண்ட செல்ஃபி பாயின்ட்களை அமைக்க உத்தரவிட்டிருக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிக்கையை திரும்பப் பெறாவிட்டால், கழகத் தலைவர்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையேற்று தி.மு.க. மாணவர் அணி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்லூரி வளாகத்திலும் மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தும் என்று தெரிவித்துக்கொள்வதாக எழிலரசன் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்