“ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியெல்லாம் டம்மி போஸ்ட் ” ஓபிஎஸ் - இபிஎஸ்சை கலாய்த்த நாஞ்சில் சம்பத்

By Raghupati RFirst Published Dec 8, 2021, 6:49 AM IST
Highlights

‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியெல்லாம் டம்மி போஸ்ட்’ என்று கலாய்த்து இருக்கிறார் திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு அண்ணா திடலில் தமுமுக சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர், நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய போது, ‘ திமுக, அதிமுக, தி க-வில் பொதுச்செயலாளர் பதவி மட்டுமே இருந்து வருகிறது. இதுவே திராவிட இயக்கங்களுடைய முறையாக இருக்கிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் எல்லாம் கிடையாது. எனவே இல்லாத பதவிக்கு யாரும் போட்டியிட மாட்டார்கள். இது டெல்லியில் தேர்தல் ஆணையமும், பிஜேபி-யும் இன்றைக்கு அவர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த எடுபிடிகளுக்கு கொடுத்திருக்கிற சன்மானம் ஆகும்.

ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை அதிமுக தொண்டர்கள் யாரும் விரும்பவில்லை. அதனால் தான் யாரும் போட்டியிடவில்லை. அதிமுக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு அமைப்பாகும். ஆனால்,  இன்று ஆதாய சூதாடிகளின் கையில், அதிகாரத் தரகர்களின் கையில் அகப்பட்டுக் கொண்டு அந்தக் கட்சி தன்னுடைய ஆன்மாவை இழந்து விட்டது. அதனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி டம்மி போஸ்ட்.

இதை யாரும் மதிக்கவே மாட்டார்கள். இது ஒரு நாள் செய்தி தானே தவிர,  இதற்கு பின்னால் எந்தச் சரித்திரமும் இருப்பதாக நான் கருதவில்லை. தமிழ் சினிமாவுக்கு ஒருநாள் உலக அங்கீகாரத்தை வாங்கித் தருகிற வல்லமையுள்ள கலைஞன் கமல்ஹாசன். அவருடைய வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு ஒரு கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டது. அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நலம் பெற்று வந்ததற்கு கலைமகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்’ என்று கூறினார்.

 

click me!