
80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு என்பது மோசடியானது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட வழக்கறிஞர் அணியின் தேர்தல் கள அலுவலகம் திறப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மா.சுப்ரமணியத்துடன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு கள அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்எஸ் பாரதி கூறியதாவது: கடந்த காலத்தில் பணியற்றியத்தை போலவே திமுக வழக்கறிஞர்கள் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் கூறியுள்ளார். இதுவரை மாநில அளவில் அண்ணா அறிவாலயத்தில் கள அலுவலகத்தை அமைத்து தமிழகம் முழுவதும் உள்ள தேர்தல் பணிகளை கவனித்து வந்தோம். ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிழும் இந்த கள பணி அலுவலகம் திறக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இன்று அலுவளங்கங்கள் திறக்கப்பட்டு வருகிறது.
சைதாப்பேட்டை பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியம் அலுவலகத்திலேயே இந்த கள அலுவலகம் திறக்கப்பட்டு இருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் கோரிக்கைகளை நியாயம் என்று உலகமும் ஏற்று கொண்டது, அரசாங்கமும் ஏற்று கொண்டது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு என்பது மோசடியானது. 7பேர் விடுதலை விவகாரத்தில் நாங்கள் கௌரவம் பார்க்கவில்லை, இது தமிழர்களின் பிரச்சனை நீண்ட நாட்களாக திமுக தரப்பில் வற்புறுத்தி வரும் பிரச்சனை, தமிழக முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார், எடப்பாடி அவர்களின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவர் அவர்களை நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இதற்கு முதல்வர் தரப்பில் என்ன சொல்கிறார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம் என்றார்.