
சசிகலா பிப்ரவரி 8ம் தேதி, சென்னை வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரப் பயணத்திட்டம் பகலில் அறிவிக்கப்பட்டு, திடீரென இரவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் ஓய்வு எடுத்து வரும் சசிகலா, வேலூர் மாவட்டம் வழியாக சென்னை திரும்ப உள்ளார். வழிநெடுகிலும் அவரை வரவேற்க அமமுக நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டு வருகின்றனர். 4 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சசிகலாவால் தமிழக அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி 5-வது கட்டத் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணமாகப் பிப்ரவரி 7, 8 ஆகிய இரு தேதிகளில் திருவள்ளூர், திருப்பத்தூர் வேலூர் ஆகிய மாவட்டங்களில் செல்கிறார் என்று வழித் தடம், பேசும் இடம், நிகழ்வுகள் ஆகியவற்றை நேற்று பகலில் அதிமுக தலைமை கழகம் வெளியிட்டிருந்தது. ஆனால் திடீரென்று நேற்று இரவே முதல்வர் தேர்தல் பிரச்சாரப் பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
8 ம் தேதி சசிகலா அதே வழியாக சென்னை வரும் நிலையில், அவரை வரவேற்க பெருமளவிலான அமமுக தொண்டர்கள் குவியும் வாய்ப்புள்ளதால், முதல்வர் பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதேநாளில் முதல்வர் பிரச்சாரம் செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று உளவுத்துறையின் அறிவுறுத்தலால் ரத்து செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.