
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலுக்கு எதிராகவும், இந்து மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி மீது ஐதராபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி நகரில் சமீபத்தில் திராவிடர் கழகம் சார்பில் உலக நாத்திக மாநாடு நடந்தது. இதில் தி.மு.க.வின் மாநிலங்கள் அவை எம்.பி. கனிமொழி பங்கேற்றுப் பேசினார். திருப்பதி கோயில் நிர்வாகம் குறித்தும், அதன் பராமரிப்பு குறித்தும் மிகவும் புகழ்ந்து பேசினார். ஆனால், கடவுள் மீது பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
அவர் பேசுகையில், “ உள்துறை விவகாரக் குழு சார்பில் திருப்பதி கோயிலுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுடன், நான் உள்ளிட்ட பல எம்.பி.க்கள் சென்று இருந்தோம். திருப்தி கோயில் நிர்வாகம் மிகச்சிறப்பாக கோயிலை பராமரித்து வருகிறது. நிர்வாகத்தை மிகவும் கட்டுக்கோப்பாக நடத்தி வருகிறது. அந்த கோயில் நிர்வாகத்திடம் இருந்து நாம் பல விஷயங்களை கற்க வேண்டியது அவசியம்.
அதேசமயம், நாங்கள் எம்.பி.க்கள் என்பதால், சிறப்பு தரிசனத்துக்கு வழி செய்யப்பட்டது. இறைவன் முன் அனைவரும் சமம் என்று கூறுவது எல்லாம் பொய்யா?. நீங்கள் அதிகமாக பணம்கொடுத்து டிக்கெட்வாங்கினால், விரைவாக இறைவனை தரிசனம் செய்ய முடியும். இல்லாவிட்டால், 10 மணி நேரம்முதல் 2 நாட்கள்வரை காத்திருக்க வேண்டும்.
கோயிலில் இறைவனுக்கு முன் இருக்கும் உண்டியல் அருகே எப்போதும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினர் இருக்கிறார்கள். உண்மையில் கடவுள் இருக்கிறார் என்றால், அவரே உண்டியை பாதுகாப்பாரே? ஏன் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிக்கிறார்கள்?. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் உண்மையில் கடவுளை நம்புகிறார்களா?’’ எனப் பேசி இருந்தார்.
இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணி அமைப்பினர் சென்னை போலீஸ் ஆணையரிடம் தி.மு.க. எம்.பி. கனிமொழி மீது புகார் அளித்தனர்.
இதற்கிடையே ஐதராபாத்தில் உள்ள சயீதாபாத் நகர் போலீஸ் நிலையத்தில் கருணா சாகர் என்ற வழக்கறிஞர் இந்த புகாரை அளித்து, கனிமொழி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
கனிமொழி மீதான புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கும் முன், சட்டப்பூர்வ ஆலோசனை நடத்துவோம் எனஐதராபாத் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.