
திமுகவினர் இந்து மதத்தை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. இது டிடிவி தினகரனுக்குப் போட்டியாகக் கூறப்பட்ட கருத்தாகவே கருதப் படுகிறது.
ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவரிடம், கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளைக் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம் குறித்து கேட்கப் பட்டது. அதற்கு அவர், திமுக தலைவர் கருணாநிதியும், அவர் வழி வரும் தி.மு.கவினரும் இந்து மதத்தை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்றார்.
மேலும், கருணாநிதியை பின்பற்றி அவரது மகள் கனிமொழியும், கவிஞர் வைரமுத்துவும் இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் பேசி இருக்கின்றனர். கவிஞர் வைரமுத்து சொன்ன கருத்துகள் பொதுவாகவே திமுகவைச் சேர்ந்தவர்கள் இந்து மதத்தைப் பழிப்பதை, இழிவுபடுத்தும் செயலை தங்களின் வாடிக்கையாகவே கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறத.
திமுக தலைவர் கருணாநிதி எவ்வழியோ அவ்வழியே அனைத்து தொண்டர்களும் அவரைப் பின்பற்றி இந்து மதத்தை புண்படுத்துபவர்களாகவே உள்ளனர். அவர்கள் இதையே வழக்கமான நடைமுறையாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.
முன்னர் சேது சமுத்திரத் திட்டத்தை பற்றி ஓர் உரையாடல் வந்த நேரத்தில் திமுக தலைவர் கருணாநிதி, ராமர் என்ன பெரிய கட்டடப் பொறியாளரா? அல்லது வல்லுநரா எனக் கேட்டு விமர்சித்தார்.
அந்த வழியில் தான் இன்று கனிமொழி, கவிஞர் வைரமுத்து போன்றவர்கள் எல்லாம், இந்து மதத்தைக் கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள். இதுவே என் கருத்து என்றார் கடம்பூர் ராஜூ.
கனிமொழி திருப்பதி பெருமாள் சக்தி குறித்தும், அங்குள்ள உண்டியல் குறித்தும் விமர்சித்துப் பேசியது, ஆந்திர மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக அமைச்சர், கடம்பூர் ராஜூ அதே திருப்பதியில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்,
முன்னதாக, கவிஞர் வைரமுத்துவை விமர்சித்து பாஜக.,வின் ஹெச்.ராஜா வைரமுத்து பயன்படுத்திய வார்த்தைகளை வைத்தே அவரை விமர்சித்தார். இதை அடுத்து, ஹெச்.ராஜாவின் தரம் தாழ்ந்த விமர்சனத்திற்கு ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், அதே பாணியில் தமிழக அரசியலில் புதிதாக எழுச்சி கண்டு வரும் டிடிவி தினகரனும் அவ்வாறே சொல்வார் என்று எதிர்பார்த்து அவரிடம் கேட்டபோது, தினகரன் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார். நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன், இவ்வாறு ஆண்டாளை இழிவு படுத்துவதை சகிக்க முடியாது. சிறுபான்மையினரை திருப்திப் படுத்த வேண்டுமென்பதற்காக பெரும்பான்மை இந்து மதத்தை இழிவாகப் பேசுவதை ஏற்க முடியாது என்று கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, தினகரனுக்கு பெரும் ஆதரவு பெருகிறது.
இந்நிலையில், அவருக்குப் போட்டியாக, தாமும் அதே விதத்தில் கருத்தைத் தெரிவ்த்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ, தாங்களும் அதே பாதையில் தான் உள்ளோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.