
ஒரு பதரைப்போல, ஒரு களையைப்போல இன்றைய ஆட்சி, அதிகாரத்தில் முளைத்துவிட்டது என்றும் அதனை நீக்க இந்த நன்னாளில் உறுதி
ஏற்போம் என்றும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
பொங்கல் விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக ஆளுநர், முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், டிடிவி தினகரன், தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பொங்கல் திருநாளில், அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
உழவர் பெருமக்கள், இயற்கையின் அருளாலும் தங்கள் கடின உழைப்பின் பலனாலும் இறைவனை வணங்கி, தம்மோடு உழைத்த கால்நடைகளுக்கும், தங்களின் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்ளும் பொன்நாள் பொங்கல் திருநாள்.
இது தமிழர்களின் தனிச்சிறப்பு மட்டுமல். தமிழர்களின் உயர்பண்பின் அடையாளம். உழவர்களின் நலனைப் போற்றிப் பாதுகாத்திட வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உரியது என்று கூறியுள்ளார்.
அரசின் தலையாய கடமையும் இதுவேயாகும். இந்த எண்ணத்தை முதன்மையாகக் கொண்டு உழவர் பெருமக்களுக்கு அரிய பெரும் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களைத் தீட்டியவர் ஜெயலலிதா என்பதை நினைத்து தான் பெருமையடைவதாக தினகரன் கூறியுள்ளார்.
ஆனால், இன்று ஜெயலலிதா எதிர்பார்த்தபடி மனநிறைவோடு உழவர் பெருமக்கள் உள்ளனரா? என்றால் நிச்சயம் இல்லை என்பதுதான் பதில். விவசாயிகளுக்கு தோள் கொடுக்கும் தோழனாக அவர்களை பாதுகாக்கும் கவசமாகத்தான் அரசு இருந்திட வேண்டும். இதற்கு முரணாக தங்களை மட்டுமே பாதுகாத்துக் கொள்ளும் எண்ணம் ஒரு பதரைப் போல, ஒரு களையைப் போல இன்றைய ஆட்சி அதிகாரத்தில் முளைத்து விட்டது.
அதை நீக்கிட இந்த நன்நாளில் உறுதி ஏற்றிடுவோம். ஆம். தை பிறந்தால் வழி பிறக்கத்தானே செய்யும் என்றும் தை பிறந்தால் வழி பிறக்கத்தானே செய்யும் என்றும் டிடிவி தினகரன் தனது பொங்கல் வாழ்த்துவில் தெரிவித்துள்ளார்.