ஜெயித்தும் தூக்கமிழந்து தவிக்கும் திமுக எம்.எல்.ஏ.,க்கள்... இன்றைக்கு விடியல் தருவாரா மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published May 6, 2021, 11:59 AM IST
Highlights

அமைச்சரவை இடம்பெறும் இளம் பிரமுகர்கள் யார்?  என வெற்றி பெற்றும் தூக்கமின்றி தவிக்கும் திமுக எம்.எல்.ஏ.,க்கள் பலரின் கேள்விகளுக்கு இன்று பதில் கிடைத்துவிடும்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 159 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் நாளை ஆளுநர் மாளிகையில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 50 ஆண்டுகால அரசியல் போராட்டத்திற்கு பிறகு, ஸ்டாலின் ஆட்சிக் கட்டிலில் அமரவுள்ளார். திமுக வெற்றி, ஸ்டாலின் பதவியேற்பு என அனைத்தும் உறுதியாகி இருக்கும் நிலையில், தனது அமைச்சரவையில் ஸ்டாலின் யார் யாரை அமர்த்தப் போகிறார் என்பது தான் தற்போது பேச்சாக உள்ளது.

திமுகவில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்? யாருக்கு வாய்ப்பு நிராகரிக்கப்படும்? என்ற பேச்சு வெகுவாக எழுந்துள்ளது. அண்மையில் சமூக வலைத்தளங்களில் பட்டியல் ஒன்று வெளியானது. அதில் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருந்தனர். ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் கூட அப்பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
 
திமுகவில் அனுபவம் பெற்ற தலைவர்கள் பலர் இருக்கும் சூழலில், புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் உதயநிதி உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் இடம் வழங்குவதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அது இறுதிப்பட்டியல் இல்லை. இன்று மதியம் ஸ்டாலினின் அமைச்சரவை பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக அண்ணா அறிவாலய வட்டாரம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலின் அமைச்சரவையில் யார் இடம் பெறப்போகிறார்கள்? உதயநிதிக்கு வாய்ப்பு கிடைக்குமா? அமைச்சரவை இடம்பெறும் இளம் பிரமுகர்கள் யார்?  என வெற்றி பெற்றும் தூக்கமின்றி தவிக்கும் திமுக எம்.எல்.ஏ.,க்கள் பலரின் கேள்விகளுக்கு இன்று பதில் கிடைத்துவிடும்.

click me!