பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்த திமுக எம்.எல்.ஏ... 50 ஆண்டு திராவிட கட்சிகளுக்கு முழுக்கு..!

By Thiraviaraj RMFirst Published Mar 3, 2021, 2:24 PM IST
Highlights

ஆயிரம் விளக்கு சட்டமன்ற திமுக உறுப்பினர் கு.க.செல்வம் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார்.
 

ஆயிரம் விளக்கு சட்டமன்ற திமுக உறுப்பினர் கு.க.செல்வம் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார். திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க. செல்வம், எல்.முருகன், சி.டி. ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்; 50 ஆண்டு திராவிட கட்சியில் இருந்தேன், இப்போது பா.ஜ.கவில் இணைந்தது மகிழ்ச்சி என பேட்டியளித்துள்ளார்.

அதிமுகவில் இருந்த கு.க.செல்வம் 1997-ல் திமுகவில் இணைந்தார். பிறகு ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அவர், திமுக தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வளர்மதியை தோற்கடித்தார். திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவால் காலியான சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று கு.க.செல்வம் எதிர்பார்த்தார். ஆனால், கடைசி நேரத்தில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான சிற்றரசுவுக்கு அப்பதவி வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்ததாக கூறப்படும் கு.க.செல்வம் திமுக நிகழ்வுகளை புறக்கணித்து வந்தார். தொடர்ந்து டெல்லி சென்று பாஜக தலைவர்களையும் கு.க.செல்வம் சந்தித்தார்.

இதையடுத்து கு.க.செல்வம் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக திமுக அறிவித்தது. இந்நிலையில், கு.க.செல்வம் இன்று பாஜகவில் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார்.

click me!