DMK : "சட்டம் ஒழுங்கு சந்திச்சு சிரிச்சது.. உங்க ஆட்சியில்தான் தெரியும்ல.." எடப்பாடியை கிழித்த அமைச்சர் !

Published : Mar 28, 2022, 05:57 AM IST
DMK : "சட்டம் ஒழுங்கு சந்திச்சு சிரிச்சது.. உங்க ஆட்சியில்தான் தெரியும்ல.." எடப்பாடியை கிழித்த அமைச்சர் !

சுருக்கம்

மு.க ஸ்டாலின் குடும்பமே துபாய்க்கு சென்றுள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய, தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க அவர் அங்கு செல்லவில்லை, துபாய்க்கு சென்றது அவருடைய தனிப்பட்ட காரணத்துக்காக தான் என மக்கள் பேசிக் கொள்கிறார்கள். 

எடப்பாடி பழனிசாமி பேட்டி :

நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, 'முதல்வர் மு.க ஸ்டாலின் துபாய் சென்றபோது அவருடன் துறை செயலாளர்கள் செல்லவில்லை, துறை அமைச்சர்கள் செல்லவில்லை. மு.க ஸ்டாலின் குடும்பமே துபாய்க்கு சென்றுள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய, தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க அவர் அங்கு செல்லவில்லை, துபாய்க்கு சென்றது அவருடைய தனிப்பட்ட காரணத்துக்காக தான் என மக்கள் பேசிக் கொள்கிறார்கள். 

அவர்கள் தங்களுக்காக புதிய தொழில் தொடங்குவதற்காக அங்கு சென்றுள்ளதாக மக்கள் பேசிக்கொள்வதை எங்களால் கேட்க முடிகிறது. அதுமட்டுமல்ல சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடங்கப்பட்ட நாள் 1-10-2021. முடிவடைகிற நாள் 31-03-2022. கண்காட்சி முடிவடைகிற தருவாயில் முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழ்நாட்டின் சார்பாக அங்கு கண்காட்சியில் அரங்கம் அமைத்து தொடங்கி வைப்பது வேடிக்கையாக இருக்கிறது.

இன்னும் 4 நாட்களில் கண்காட்சி முடியவடைய போகிறது. 1-10-2021-ல் தொடங்கி வைத்திருந்தால் பரவாயில்லை. ஆகவே இதை ஒரு காரணமாக வைத்து துபாய் செல்வதற்கு பயன்படுத்தி இருக்கிறார். நான் வெளிநாடு சென்றபோது சாதாரண விமானத்தில் தான் பயணம் செய்தேன். என்னுடன் அந்தந்த துறைகளுடைய அமைச்சர்கள், செயலாளர்கள் வந்தார்கள். இதை அமைச்சர்கள் சுற்றுலா என்று மு.க ஸ்டாலின் விமர்சித்தார். வேண்டும் என்றே திட்டமிட்டு எங்கள் மீது அவதூறு பரப்பினார்' என்று கடுமையாக கண்டனத்தை தெரிவித்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி :

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘முதலமைச்சர் அவர்களுடைய வெளிநாட்டுப் பயணம் தனி விமானத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருப்பது என்பது, அவர் விமான பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிற சூழ்நிலையில், விமான வசதிகள் கிடைக்காத காரணத்தினால், அவருக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

தனி விமானத்திற்கான செலவைகூட திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஏற்றுக்கொண்டிருக்கிறதே ஒழிய, இன்றைக்கு அரசாங்கத்தினுடைய நிதி செலவழிக்கப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இரண்டாவதாக, அவர் குடும்பச் சுற்றுலா மேற்கொண்டிருப்பதாக நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். 

முதலமைச்சருடைய இந்தப் பயணம் என்பது முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாத்திரம் அல்ல, அயலகத்திலே கடைக்கோடி தமிழகத்தில் இருந்து இங்கு வந்து வியர்வை சிந்தி உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்தினுடைய வளத்திற்காகவும், வாழ்விற்காகவும் அவர் இந்தப் பயணத்தை இங்கே மேற்கொண்டிருக்கிறார். நேற்று முன்தினம் இங்கு வந்திருக்கக்கூடிய அவருக்கு தமிழ்ச் சமுதாயம் அளித்திருக்கக்கூடிய வரவேற்பை நாட்டு மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னொன்றையும் அவர் சொல்லியிருக்கிறார். நம்முடைய உலக வர்த்தகப் பொருட்காட்சி என்பது முடிவுறும் தருவாயில் முதலமைச்சர் வந்திருக்கிறார் என்று, இது கோவிட் காலத்தினாலேயே தள்ளிப்போய் வந்திருக்கிறது. இன்னொன்று இது ஆரம்பிக்கும்போது வந்திருக்கக்கூடிய வரவேற்பைவிட, முடியும்போதுதான் மிகப் பெரிய கூட்டம் வந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தொழில் முதலீடுகள் குறித்தும் பேசியிருக்கிறார்கள். 

நான் கேட்க விரும்புவது, அவர் முதலமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களினால் எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வந்தது. இன்றைக்கு முதலமைச்சர் இந்த மூன்று நாட்களில் துபாய், அபுதாபி பயணங்களில் ஏறத்தாழ 6,200 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளார். வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். கடந்த ஆட்சியில் அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக ஈர்த்தாக சொல்லப்படும் முதலீடுகள் குறித்து சட்டமன்றத்தில் நான் மிகத் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறி அவையெல்லாம் அவை குறிப்பில் இடம் பெற்றிருக்கின்றன.

இன்னொன்று, சட்டம் – ஒழுங்கு பிரச்சனை குறித்து இபிஎஸ் பேசியிருக்கிறார். விருதுநகர் பாலியல் வழக்குக் குறித்துக்கூட அவர் பேசியிருக்கிறார் அதிமுக ஆட்சியில் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபொழுது, சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சந்தி சிரித்தது என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துக் கொண்டிருக்கக்கூடிய புகழை, அந்த வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமல் இத்தகைய புழுதிகளை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இறைத்துக் கொண்டிருக்கிறார். இதை நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!
எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!