
தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மூலம், மத்திய அரசுக்கு நேரடியாக ஆதரவும் அளிப்பது தெளிவாகத் தெரிகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.அகில இந்தியா தொழிற்சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக நாளை (மார்ச் 28) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 29) ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழக அரசைப் பொருத்தவரை இந்த போராட்டத்திற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாட்களில் பணிக்கு வராதவர்கள் குறித்த தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மின்வாரிய தொழிலாளர்களும் வேலைக்கு வரவில்லை என்றால் ஊதியம் கிடையாது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த போராட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நாளையும் நாளை மறுநாளும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இதில் போக்குவரத்து, மின்துறை, வங்கி, காப்பீடு துறை பணியாளர்கள் என 20 கோடி பேர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசைப் பொறுத்தவரையில், வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அறிவித்திருப்பது தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது. தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்வது எந்த வகையில் நியாயம். இதன் மூலம் மத்திய அரசுக்கு மறைமுகமாக எதிர்ப்பும் நேரடியாக ஆதரவும் தமிழக அரசு அளிக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
ஊழியர்களின் போராட்டம் குறித்த விஷயத்தில் தமிழக அரசு தெளிவான முடிவை எடுப்பதோடு போராட்டத்திற்கு அனுமதி அளிக்கிறதா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். மேலும் 28, 29 ஆகிய தேதிகளில் உரிமைக்காகப் போராட்டம் நடத்த உள்ள ஊழியர்களின் சம்பளத்தைப் பிடிக்கக் கூடாது. தமிழக அரசின் செயல் பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது போல் உள்ளது" என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.ம்
முன்னதாக தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்பில், மார்ச் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் எந்தவிதமான விடுமுறையும் வழங்கப்பட மாட்டாது. மேலும், 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பற்றிய விவரங்களை துறைவாரியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.