என்ன தான் விதவிதமாக கோட்- சூட் மாட்டினாலும்.. வேட்டி- சட்டை தான் நமக்கு கெத்து.. முதலமைச்சர் வெளிப்படை..

Published : Mar 27, 2022, 08:11 PM IST
என்ன தான் விதவிதமாக கோட்- சூட் மாட்டினாலும்.. வேட்டி- சட்டை தான் நமக்கு கெத்து.. முதலமைச்சர் வெளிப்படை..

சுருக்கம்

கோட் - சூட் அணிந்தால் வெளிப்படும் கௌரவம், கெத்து இவற்றைவிட, வெள்ளை சட்டையும், இருவண்ணக் கரை வேட்டியும்தான் எப்போதும் கெத்து, எந்நாளும் கௌரவம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

துபாய் பயண அனுபவம் மற்றும் அங்கு நடந்த நிகழ்வுகள் குறித்து திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் கடல் கடந்து எழுதும் மடல் என்று ஆரம்பிக்கிறது அந்த கடிதம்...

அதில், துபாயில் வாழும் தமிழ்ச் சொந்தங்களை சந்திப்பதற்காகப் புறப்பட்டேன். மனதிற்கு மிக நெருக்கமான நிகழ்வு என்பதால் மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. ஏறத்தாழ 10 ஆயிரம் தமிழர்கள் கூடியிருந்த பிரம்மாண்ட நிகழ்வு. அரங்கிற்குள் வர முடியாமல் வெளியிலும் பல்லாயிரம் பேர் திரண்டிருந்தனர். துபாய் சென்றதிலிருந்து பன்னாட்டு நிகழ்வுகள் பலவற்றில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால் கோட் - சூட் உடை அணிந்து சென்று வந்தேன். 

தமிழ்ச் சொந்தங்களை சந்திக்கும் நிகழ்வு என்றதுமே வழக்கம்போல வேட்டி - சட்டை அணிந்து சென்றேன். என்னை அந்த உடையில் பார்த்ததுமே, முதன்மைச் செயலாளர் திரு.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்கள், "இதுதாங்க சார் ரொம்ப நல்லா இருக்கு" என்றார். உண்மைதானே! கோட் - சூட் அணிந்தால் வெளிப்படும் கௌரவம், கெத்து இவற்றைவிட, வெள்ளை சட்டையும், இருவண்ணக் கரை வேட்டியும்தான் எப்போதும் கெத்து. எந்நாளும் கௌரவம். '

நம்மில் ஒருவர்-நமக்கான முதல்வர்' என்ற தலைப்பில் நடைபெற்ற அமீரகத் தமிழர்களுடனான சந்திப்பில் இலங்கையின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரஃபூக், மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன் ஆகியோர் பேசினர். துபாய் அரசின் சார்பில் இருவர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நான் எப்போதும் உங்களில் ஒருவன் என்றுதான் எழுதுவேன். இந்தக் கடிதத்தையும் அப்படித்தான் எழுதுகிறேன். 

என் தன்வரலாற்று நூலுக்கும் உங்களில் ஒருவன் என்றுதான் தலைப்பு. உங்களில் ஒருவன் என்றே நான் எழுதுவதை அந்த நிகழ்வில் சுட்டிக்காட்டி, "நான் உங்களில் ஒருவன் என்கிறேன். நீங்கள் நம்மில் ஒருவர் என்கிறீர்கள். உங்களுடன் ஒரு செல்பி எடுத்துக் கொள்ளலாமா?" என்று கேட்டு, செல்பி எடுத்தபோது அவ்வளவு ஆரவாரம் செய்தனர். என்னுடைய உரையிலேயே, "எதுவும் பேசாமல் உங்களைப் பார்த்துக் கொண்டே இருந்துவிடலாம் என்று தோன்றுகிறது" என்று சொன்னேன். 

அத்தனை மகிழ்ச்சியை துபாயில் தமிழ்ச் சொந்தங்கள் வெளிப்படுத்தினர். "தமிழர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சியம். நீங்கள் வாழும் நாட்டை முன்னேற்றுங்கள். அதே நேரத்தில், நாம் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடாமல் வாழுங்கள். இந்த வாட்டின் வளத்தையும் அறிவையும் தொழில்நுட்பத்தையும் தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்யுங்கள்.

எவ்வளவு உயரமாக மரம் வளர்ந்தாலும், அது தன்னுடைய வேரை விட்டுவிடுவதில்லை. அதைப்போல தமிழை - தமிழ்நாட்டை விட்டுவிடாமல் தமிழராய் வாழ்வோம். தமிழை வளர்ப்போம். தமிழரை வளர்ப்போம்" என்று உரையாற்றினேன். நெஞ்சுக்கு நெருக்கமான இந்நிகழ்வினால் நேற்றைய இரவு மிக இனிமையாக அமைந்தது. என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!