திமுகவில் தொடர்ந்து வழக்கறிஞர் அணிக்கே வாய்ப்பு... கருணாநிதியால் விமர்சிக்கப்பட்டவருக்கும் எம்.பி. சீட்டு!

By Asianet TamilFirst Published Mar 2, 2020, 10:40 AM IST
Highlights

வழக்கறிஞர் அணிக்கு தொடர்ச்சியாக மு.க. ஸ்டாலின் வாய்ப்பு வழங்கிவருகிறார். ஏற்கனவே வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, வில்சன் ஆகியோர் எம்.பி.க்களாக உள்ள நிலையில், மீண்டும் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த என்.ஆர். இளங்கோவுக்கு திமுக வாய்ப்பு வழங்கி உள்ளது. இது திமுகவில் உள்ள பிற அணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ராஜ்ய சபா தேர்தலில் தொடர்ந்து வழக்கறிஞர் அணிக்கு திமுக வாய்ப்பு வழங்கிவரும் நிலையில், இந்த முறையும் வழக்கறிஞர் அணிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியால், ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று விமர்சிக்கப்பட்ட அந்தியூர் செல்வராஜும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 
தமிழகத்தில் 6 ராஜ்ய சபா எம்.பி.க்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் மார்ச் 26 அன்று நடைபெற உள்ளது. வரும் 9-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ள நிலையில், திமுக 3 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தலில் வைகோவுக்கு மாற்று வேட்பாளராக என்.ஆர். இளங்கோ அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த முறை அவர் வேட்பாளராக ஆகியிருக்கிறார்.


திருச்சி சிவாவுக்கு நான்காவது முறையாக ராஜ்ய சபாவுக்கு அனுப்பப்பட உள்ளார். தற்போது திருச்சி சிவா ராஜ்ய சபா திமுக கட்சித் தலைவராக செயல்பட்டுவருகிறார். எனவே, எதிர்பார்த்தபடி திருச்சி சிவா மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த ஒரு அறிவிப்புகளும் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. நான்காவது முறையாக திருச்சி சிவாவுக்கு ஏன் வாய்ப்பு வழங்க வேண்டும். திமுகவில் வேறு ஆட்களே இல்லையா என்ற கேள்வியையும் பலர் அரசியல் விமர்சர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.


இதேபோல் வழக்கறிஞர் அணிக்கு தொடர்ச்சியாக மு.க. ஸ்டாலின் வாய்ப்பு வழங்கிவருகிறார். ஏற்கனவே வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, வில்சன் ஆகியோர் எம்.பி.க்களாக உள்ள நிலையில், மீண்டும் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த என்.ஆர். இளங்கோவுக்கு திமுக வாய்ப்பு வழங்கி உள்ளது. இது திமுகவில் உள்ள பிற அணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கொங்கு மண்டலம் எப்போதும் திமுகவுக்கு சவாலாக உள்ள பகுதிஎன்பதால், அந்த மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் அறிவிக்கப்பட்டாலும், அந்தியூர் செல்வராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அந்தியூர் செல்வராஜ் அருந்ததி இனத்தைச் சேர்ந்தவர். 1996-2001ம் ஆண்டு காலகட்டத்தில் அந்தியூர் செல்வராஜ் தமிழக அமைச்சராக இருந்தபோது கோயிலில் தீ மிதித்தார். இதைக் காட்டுமிராண்டித்தனம் என்று அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி விமர்சித்தார். திமுக தலைமையின் நடவடிக்கைக்கும் ஆளானவர். இந்நிலையில் அந்தியூர் செல்வராஜ் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

click me!