கலக்கத்தில் கூட்டணி கட்சிகள்,கைக்கழுவும் தி.மு.க நிர்வாகிகள்

By Asianet TamilFirst Published Mar 22, 2021, 3:31 PM IST
Highlights

கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களில் தி.மு.கவினர் கலந்து கொள்ளாமல் புறகணித்து வருகின்றனர், தொகுதி பங்கீட்டில் தொடங்கிய மனகசப்பு தற்போது களத்திலும் தொடர்வதால், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வெற்றி வாய்ப்பு பறிபோகும் என்ற கலக்கத்தில் உள்ளனர். 

கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களில் தி.மு.கவினர் கலந்து கொள்ளாமல் புறகணித்து வருகின்றனர், தொகுதி பங்கீட்டில் தொடங்கிய மனகசப்பு தற்போது களத்திலும் தொடர்வதால், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வெற்றி வாய்ப்பு பறிபோகும் என்ற கலக்கத்தில் உள்ளனர். 

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் முதல் வட்ட செயலாளர்கள் வரை தங்களுக்கு வாக்கு சேகரிக்க வந்தால் வெற்றி பெற முடியும் என்று நம்புகின்றனர்.

தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளான காங்கிரஸ், வி.சி.க, ஐ.யு.எம்.எல் போன்ற கட்சிகள் தி.மு.க தலைவர்களை பிரச்சாரத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர். இதற்கு தி.மு.கவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வாணியம்பாடியில் ஐ.யு.எம்.எல் வேட்பாளர் முகமது நயீம் வாணியம்பாடி அம்பூர்பேட்டை யில் உள்ள நகர திமுக அலுவலகத்துக்கு ஆதரவு கேட்டு சென்றுள்ளார், அங்கு கூடியிருந்த தி.மு.கவினர் முகமது நயீம் உள்ளிட்டோரை சூழ்ந்துகொண்டு  உங்களுக்கு வேலை செய்ய முடியாது வேண்டும் என்றால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதேபோல், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தி.மு.கவினர் கூட்டணி கட்சிகளை புறகணித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் துரைசந்திரசேகர் அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பேசியதற்கு தி.மு.கவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது.

வி.சி.க போட்டியிடும் தொகுதிகளில் தி.மு.கவினர் பிரச்சாரத்திற்கே வருவதில்லை என்று வி.சி.க தொண்டர்கள் மனவருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். பேனர்கள் கட்டுவதற்கும் கூட்டத்தை கூட்டுவதற்கும் தங்களை பயன்படுத்தி கொள்ளும் தி.மு.கவினர், வி.சி.கவிற்கு தொகுதி ஒதுக்கப்பட்டவுடன் கண்டு கொள்வதில்லை என்று தெரிவிக்கின்றனர். 

கூட்டணி பேச்சு வார்த்தையின் போதே நீண்ட இழுபறிக்கு பின்னர்தால் தி.மு.க அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது. பேச்சுவார்த்தையின் போதே கூட்டணி கட்சிகளை கழற்றி விட தி.மு.க திட்டமிட்டிருந்தாக கூறப்பட்டது தற்போது நீருபணமாகி வருகிறது. இதனால் திமுகவின் கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலில் தோற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது, இதை பற்றி தி.மு.கவோ, அல்லது அதன் தலைமையோ எதுவும் வருத்தப்படுவதாக தெரியவில்லை.   

மற்றொரு பக்கம் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறிய கூட்டணி கட்சிகளுக்கும் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

click me!