மாநிலம் முழுவதும் பரப்புரை செய்ய அனுமதிக்க முடியாது... உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தடாலடி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 22, 2021, 03:27 PM IST
மாநிலம் முழுவதும் பரப்புரை செய்ய அனுமதிக்க முடியாது... உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தடாலடி...!

சுருக்கம்

தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  

அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள், மாநில முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதியளிக்க முடியாது எனவும், தொகுதி வாரியாக விண்ணப்பித்து அனுமதி பெறலாம் எனவும் தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் களம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. கட்சி கொடிகளுடன் வாக்கு கேட்கச் செல்லும் தொண்டர்கள், வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் என தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது. ஒருபக்கம் பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பாக வழிநடத்தி, ஜனநாயக திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம்  திட்டமிட்டு வருகிறது. இதேவேளையில் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. 

தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதைப் போல், பதிவு செய்யப்பட்ட தங்கள் கட்சிக்கும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை என மனுதாரர் கட்சி தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், கடந்த மூன்று தேர்தல்களில் போட்டியிடாத பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமில்லாத கட்சிகள், தொகுதி வாரியாக, தேர்தல் அதிகாரிகளுக்கு விண்ணப்பித்து பரப்புரைக்கான அனுமதியை பெறலாம் என கடந்த 15ம் தேதியே பதிலளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். 

தேர்தல் ஆணையத்தின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும், தேர்தல் ஆணையத்தின் பதிலின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மனுதாரர் கட்சி எடுக்கலாம் எனவும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!