ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக முன்னாள் அமைச்சர் சற்குணம் பாண்டியன் மருமகள் சிம்லா முத்து சோழன் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதாவிற்கு டப் கொடுத்த சிம்லா முத்து சோழன்
தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.சற்குணபாண்டியன், இவர் திமுக துணை பொதுச்செயலாளராகவும் இருந்தார். ஆர்.கே. நகரில் சற்குணபாண்டியன் பலமுறை வெற்றிபெற்றுள்ளார். இதனைடுத்து 2016ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா களம் இறங்கினார். இவருக்கு டப் கொடுக்க எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் களம் இறக்கப்பட்டார். இவரும் ஆர்.கே.நகர் தொகுதியை சுற்றி சுற்றி வந்தார்.
திமுகவில் வாய்ப்பு மறுப்பு
ஒரு தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் வெற்றி வித்தியாசம் 50ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும். ஆனால் சிம்லா முத்து சோழனில் களப்பணியால் 30ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலையே ஜெயலலிதா வெற்றி பெற்றார். ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டதால், சிம்லா முத்துச்சோழன் தமிழகம் முழுவதும் பிரபலமானார். இதனையடுத்து ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் சிம்லா முத்து சோழனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்தார். ஆனால் உரிய வாய்ப்பு வழங்காமல் வழக்கறிஞராக இருந்த மருது கணேஷ்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் டிடிவி தினகரனுக்கு எதிராக டெபாசிட் கூட வாங்க முடியாமல் தோல்வி அடைந்தார்.
அதிமுகவில் இணைந்த சிம்லா
அடுத்தடுத்த தேர்தல்களில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த் சிம்லா முத்து சோழனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சற்குண பாண்டியன் மறைவுக்கு பின் கட்சியில் உரிய மரியாதை கிடைக்காத நிலை ஏற்பட்டது.இதனையடுத்து கட்சி பணியில் இருந்து சற்று விலகி இருந்தவர் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார்.