திமுக - சிபிஐ தொகுதி பங்கீட்டில் இழுபறியா?... கல்யாண பேச்சுவார்த்தையுடன் ஒப்பிட்டு முத்தரசன் விளக்கம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 4, 2021, 7:00 PM IST
Highlights

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இரட்டை இலக்கத்தில் சீட்டு கேட்பதால் திமுக பேச்சுவார்த்தை இழுபறியாக மாறியுள்ளது.  

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் அதே தேதியில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் தேதி வெளியானதால் அரசியல் கட்சி தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தையில் வேகமாக ஈடுபட்டுள்ளன.திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது திமுக.  திமுக கூட்டணியைப் பொறுத்தவரை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இரட்டை இலக்கத்தில் சீட்டு கேட்பதால் திமுக பேச்சுவார்த்தை இழுபறியாக மாறியுள்ளது.   திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான தொகுதி பங்கீடு குறித்த  முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 2ம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் முத்தரசன் உள்ளிட்ட சிபிஐ கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், திமுகவின் டி.ஆர். பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், “திமுக - சிபிஐ இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூக நிறைவு பெற்றிருக்கிறது, நாளை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என தெரிவித்தார். எத்தனை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதை நாளை மகிழ்ச்சியுடன் அறிவிப்போம் எனக்கூறினார். செய்தியாளர்கள் மீண்டும் மீண்டும் தொகுதி பங்கீட்டில் சிக்கலா? எனக்கேட்டதால் சற்றே சூடான முத்தரசன், கல்யாணம் என்றால் பெண் வீடு பார்க்க போவோம், அவர்கள் மாப்பிள்ளை வீடு பார்க்க வருவார்கள் அதன் பின்னரே நிச்சயதார்த்தம் நடக்கும், கல்யாண தேதி பின்னர் தானே முடிவு செய்வார்கள்... உடனே தீர்மானிக்க முடியாது எனக்கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். 
 

tags
click me!