
தொண்டையில் நோய் தொற்று, அடிக்கடி எட்டிப்பார்க்கும் காய்ச்சல் ஆகிய எல்லாவற்றையும் தாண்டி தன் சிஷ்யன் வீட்டு துக்கத்தில் பங்கேற்க கோயமுத்தூர் சென்றிருக்கிறார் ஸ்டாலின்.
முன்னாள் தி.மு.க.அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமியின் தம்பி மகள் டாக்டர். வித்யா. சிறு வயதிலிருந்தே பொங்கலூர் பழனிசாமியின் வீட்டிலேயே வளர்ந்ததால் அவரது மகளாகவே கவனிக்கப்பட்டார். வித்யாவின் கணவர் கோகுல் கிருபாசங்கரும் டாக்டர்தான். இவர் அக்கட்சியின் மருத்துவரணி மாநில துணை செயலாளராக இருக்கிறார். ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவர் கோகுல் கிருபா சங்கர். ஸ்டாலினின் உடல் நலனை மெயிண்டெயின் செய்யும் மருத்துவர்கள் வட்டாரத்தில் இவரும் ஒருவர்.
தி.மு.க.வின் தலைமை கட்டளையிடும் உத்தரவுகளை மளமளவென செய்து முடிப்பதில் இளைஞரணிக்கு இணையாக மருத்துவரணியும் பணியாற்றுவதால் அந்த அணியை ஸ்டாலினுக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் அந்த அணியின் மாநில நிர்வாகிகளை ஸ்டாலினின் சிஷ்யர்கள் என்பார்கள்.
இச்சூழ்நிலையில் கோகுல் கிருபாசங்கரின் மனைவியான டாக்டர் வித்யா கடந்த சில தினங்களுக்கு முன் இறந்துவிட்டார். இருதய நோயினால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாய் செயழிலந்து மரணம் ஏற்பட்டதாக மருத்துவமணை வட்டாரம் கூறியதாம். ஆனால் மனமுடைந்து நேர்ந்த மரணம் இது என்றும் பற்றி ஒரு சலசலப்பு உண்டு.
இந்நிலையில் வித்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தனது மனைவி துர்கா மற்றும் அக்கா செல்வி ஆகியோரை அனுப்பியிருந்தார் ஸ்டாலின். ஆனால் உடல் நிலை சரியில்லை என்பதால் தான் அங்கே செல்ல முடியவில்லை என்று போனில் தகவல் சொல்லியிருந்தார்.
இந்நிலையில் இன்னமும் உடல்நிலை முழுமையாக குணமடையாத சூழலில் இன்று கோயமுத்தூருக்கு சென்றிருக்கிறார் ஸ்டாலின். இறப்பு நிகழ்ந்த வீட்டுக்கு சென்றவர் பொங்கலூர் பழனிசாமி, வித்யாவின் கணவர் கோகுல் கிருபாசங்கர் மற்றும் வித்யாவின் அண்ணனும் மாநில இளைஞரணி துணை செயலாளருமான பைந்தமிழ் பாரி ஆகியோரிடம் வித்யாவின் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களை கூறி, துக்கம் விசாரித்ததோடு ஆறுதலும் கூறி தேற்றி இருக்கிறார்.
அவருடன் ஆ.ராசா, சாமிநாதன், பொன்முடி ஆகியோரும் சென்றிருந்தனர்.