
அ.தி.மு.க.வில் அது ஒரு ஜெயலலிதா காலம். உள்ளாட்சி தேர்தல் சமயம். சென்னையில் மாநகராட்சி கவுன்சிலர் பதவி ஒன்றுக்கு ஜெயக்குமாரின் ஆதரவாளரும், மதுசூதனனின் ஆதரவாளரும் முட்டி மோதினார்கள். கடைசியில் தன் ஆதரவாளருக்கு சீட் வாங்கி கொடுத்துவிட்டார் ஜெயக்குமார். டென்ஷனான மதுசூதனன் டீம் அந்த வேட்பாளருக்கு எதிராக உள்ளடி வேலையை வெச்சு செய்தது. விளைவு, தோற்றார் ஜெயக்குமாரின் ஆதரவாளர்.
விவகாரம் ஜெயலலிதாவின் காதுகளுக்குப் போக, மதுசூதனனை போயஸுக்கு அழைத்து ஜெயலலிதா நடத்திய பரேடில் மனிதருக்கு சப்தநாடியும் ஒடுங்கிப்போனது.
அதே அ.தி.மு.க.வில் இப்போது ஜெயலலிதா இல்லாத காலம். எம்.எல்.ஏ. பதவிக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது. சீட்டை பிடிக்க மதுசூதனன் முயல, அதை தடுக்க முயன்றார் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால் பன்னீரின் மிரட்டல் கண்டிஷனால் சீட் மதுசூதனின் கைகளுக்கு போயிருக்கிறது. ஜெயக்குமாருக்கும் பெரும் அதிர்ச்சி.
மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் வடசென்னை பகுதியில் இரண்டு விதமான ரியாக்ஷன். பன்னீரின் ஆதரவாளர்கள் இதை கொண்டாடுகிறார்கள். ஆனால் அந்த மண்ணின் மைந்தரான ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் கடும் அப்செட்டில் இருக்கிறார்கள்.
இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் வட சென்னையின் சில குப்பங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அவசர அவசரமாக அ.தி.மு.க.வின் ஒரு பகுதியினர் ஆலோசனை கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். அதிகாரப்பூர்வமற்று நடைபெற்றிருக்கும் இந்த கூட்டத்தில் ‘மதுசூதனனை தோற்கடிப்போம்.’ என்று உறுதி எடுத்திருக்கிறார்களாம்.
அதே வேளையில் மது அறிவிக்கப்பட்டதில் கொண்டாட்டத்தில் இருக்கும் தரப்பு, இவர்களின் உள்ளடி வேலை முடிவை ஏற்கனவே ஸ்மெல் செய்திருப்பதால் ‘மதுசூதனனை எம்.எல்.ஏ.வாக்கியே தீருவோம்.’ என்றிருக்கிறார்களாம்.
இதற்கிடையில் மதுசூதனனை தோற்கடிக்கும் முடிவை அ.தி.மு.க.வின் ஒரு தரப்பு எடுப்பதற்காக ஆலோசனை கூட்டம் நடத்தியது உளவுத்துறை மூலம் இரண்டு முதல்வர்களின் கவனத்துக்கும் போயிருக்கிறது. முதன்மை நபரோ ‘அவருக்குதான் கொடுக்கணும்னு சொன்னாரு. கொடுத்தாச்சு.
இனி ஜெயிக்கிறதெல்லாம் அவங்க பொறுப்பு.’ என்று கழண்று கொண்டாராம். துணையோ ‘கொடுக்குற மாதிரி கொடுத்துட்டு பின்னாடி கவிழ்க்கிற வேலையை பார்த்தாலோ, கவிழ்க்க முயல்றவங்களை கண்டுக்காம, கண்டிக்காம இருந்தாலோ பிறகு நாம யாருங்கிறதை காட்டுவோம்.’என்கிற ரேஞ்சுக்கு உறுமியிருக்கிறார்.
ஆக மொத்தத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க.வில் ஜெயிக்கப்போவது யார்? என்கிற யுத்தம் துவங்கிவிட்டது.