ரகு உயிரிழப்புக்கு அலங்கார வளைவுதான் காரணம்..! எத்தன தடவ சொல்றது..? பேனர், கட் அவுட்களை அகற்றுங்க..! ஹைகோர்ட் அதிரடி..!

 
Published : Nov 30, 2017, 01:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
ரகு உயிரிழப்புக்கு அலங்கார வளைவுதான் காரணம்..! எத்தன தடவ சொல்றது..? பேனர், கட் அவுட்களை அகற்றுங்க..! ஹைகோர்ட் அதிரடி..!

சுருக்கம்

high court order to remove banners in kovai

கோவையில் அனுமதி இல்லாமல், விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்கள், கட் அவுட்கள் மற்றும் அலங்கார வளைவுகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேனர்கள், கட் அவுட்களை அகற்றக்கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட்களோ அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களோ வைக்கக்கூடாது என உத்தரவிட்டது. மேலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது எனவும் இதை உள்ளாட்சி நிர்வாகமும் போலீசாரும் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

ஆனாலும் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக, சாலையையும் நடைபாதைகளையும் ஆக்கிரமித்து பேனர்களும் அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

வரும் டிசம்பர் 3-ம் தேதி கோவையில் நடக்க இருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக 10 நாட்களுக்கு முன்னரே பேனர்களும் அலங்கார வளைவுகளும் ஆளும் அதிமுக அரசு சார்பில் வைக்கப்பட்டது. கடந்த 24-ம் தேதி மாலையிலிருந்தே பேனர்களும் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டதால், கோவை-அவிநாசி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

அன்று இரவு அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரகு என்ற இளைஞர், சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த அலங்கார வளைவில் மோதி கீழே விழுந்த ரகு மீது லாரி ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனால் ஆத்திரமடைந்த கோவை மக்களின் எதிர்ப்பை அடுத்து பேனர்களும் அலங்கார வளைவுகளும் அவசர அவசரமாக அகற்றப்பட்டன. 

எனினும் ரகுவின் உயிரிழப்புக்கு சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுதான் காரணம் என கோவை மக்கள் குற்றம்சாட்டினர். 

பேனர்கள், கட் அவுட்கள் வைப்பது தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் அரசு செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திக் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், பேனர்கள் தொடர்பான உத்தரவை செயல்படுத்தாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 27ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், பேனர்கள் தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் புறக்கணித்ததால் கோவையில் ரகு என்ற இளைஞர் உயிரிழந்துவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல், சாலையையும் நடைபாதைகளையும் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி ரகு உயிரிழந்தார். எனவே நீதிமன்றத்தின் உத்தரவை முறையாக செயல்படுத்தாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

அந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பேனர்கள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். பேனர்கள் விவகாரத்தில் விதிகளை பின்பற்றுவதில்லை. விதிகளை மீறி சாலையை ஆக்கிரமித்து பேனர்களையும் கட் அவுட்களையும் வைக்க அரசு அதிகாரிகள் எப்படி அனுமதி கொடுக்க முடியும்? 

சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுதான் ரகுவின் உயிரிழப்புக்குக் காரணம் என தெளிவாக தெரிகிறது.

எனினும் மரணம் தொடர்பான விசாரணைக்குள் செல்ல விரும்பவில்லை. விதிகளை மீறி அனுமதியில்லாமல், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பேனர்கள், கட் அவுட்கள் மற்றும் அலங்கார வளைவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். எந்த கட்சியினராக இருந்தாலும், விதிகளை மதித்து நடக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு 23 தொகுதிகளா? ஓபிஎஸ், டிடிவியை ஏற்றுக்கொண்டாரா இபிஎஸ்? நயினார் சொன்ன முக்கிய அப்டேட்!
திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!