அசோக்குமார் தற்கொலை..! தலைமறைவாக உள்ள அன்புச்செழியனின் திடீர் ”டிவிஸ்ட்”..!

First Published Nov 30, 2017, 12:51 PM IST
Highlights
cinema financier anbuchezhiyan got back bail petition


நடிகர் சசிகுமாரின் உறவினரும் திரைப்பட இணை தயாரிப்பாளருமான அசோக்குமார் தற்கொலை வழக்கில், முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, ஃபைனான்சியர் அன்புச்செழியன் திடீரென வாபஸ் பெற்றுள்ளார்.

நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான சசிகுமாரின் உறவினரும் இணை தயாரிப்பாளருமான அசோக்குமார், கடந்த 21-ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் தான் தனது தற்கொலைக்குக் காரணம் என கடிதம் எழுதிவைத்துவிட்டு அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், இயக்குநர்கள் அமீர், சுசீந்திரன், கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் அன்புச்செழியனுக்கு எதிராக உள்ளனர். ஆனால் அதேநேரத்தில், தயாரிப்பாளர்கள் தாணு, மன்னன், இயக்குநர்கள் சீனு ராமசாமி, வெற்றி மாறன், ராஜகுமாரன், நடிகை தேவயானி உள்ளிட்டோர் அன்புச்செழியனுக்கு ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளனர்.

அசோக்குமாரின் தற்கொலையை அடுத்து அன்புச்செழியன் தலைமறைவாக உள்ளார். அன்புச்செழியன் மீது சசிகுமார் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

தலைமறைவாக உள்ள அன்புச்செழியனை கடந்த ஓரு வாரத்திற்கும் மேலாக போலீசார் தேடிவருகின்றனர். ஆனால், இதுவரை அவர் எங்கு இருக்கிறார் என போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக அவரது நண்பர் முத்துக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அன்புச்செழியனின் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

ஆனால், அன்புச்செழியனை நெருங்கமுடியவில்லை. இதற்கிடையே, அசோக்குமார் தற்கொலை வழக்கில் முன் ஜாமீன் கேட்டு அன்புச்செழியன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமாருக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை. சசிகுமார் நடித்த `தாரை தப்பட்டை' படத்துக்காக நான் நிதியுதவி செய்தேன். ஆனால், அந்தப் படம் ஓடவில்லை. எதிர்பார்த்த அளவில் படம் ஓடாததால் நஷ்டம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் நான் என்னுடைய கடனைத் திரும்பத் தருமாறு அசோக்குமாரிடம் கேட்டேன். அதற்கு அவர் `கொடிவீரன்' படம் மூலமாக கடனைத் திருப்பி அடைப்பதாக கூறினார். இந்த அளவுக்கே பிரச்னை உள்ள நிலையில், நான் அவரிடம் வட்டிக்கு மேல் வட்டி கேட்டதாகவும், தரவில்லை என்றால் அவர்கள் வீட்டுப் பெண்களை தூக்கி விடுவேன் எனக்கூறி மிரட்டியதாகவும் என்மீது பொய்யான குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

திரைப்படத் துறையினருடன் கடந்த 30 ஆண்டுகளாக எனக்கு நெருக்கம் உள்ளது. படத்துக்கு நிதியுதவி செய்வதும், அந்த படம் திரையிடுவதற்கு முன்பே கொடுத்த கடனையும், வட்டியையும் சேர்த்து வசூலிப்பது நான் செய்துவரும் தொழில். வட்டிக்கு மேல் வட்டி போட்டு வசூலிப்பது எப்போதும் இல்லை.  எனவே, அசோக்குமாரின் தற்கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்ற கூறப்பட்டிருந்தது.

அன்புச்செழியனின் முன் ஜாமீன் கோரிய மனு, இன்றைய நீதிமன்ற விசாரணையில் பட்டியலிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்புச்செழியனின் வழக்கறிஞர் அந்த முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக நீதிபதி ஆதிநாராயணனிடம் தெரிவித்தார்.

தலைமறைவாக உள்ள அன்புச்செழியனை போலீசார் தீவிரமாக தேடிவரும் நிலையில், முன் ஜாமீன் மனுவை அன்புச்செழியனின் வழக்கறிஞர் வாபஸ் பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் திரைத்துறையினரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 

click me!