திமுக கோட்டைவிட்ட தொகுதிகள்.. வேட்பாளர் தேர்வில் கவனம் தேவை... எச்சரிக்கும் உடன்பிறப்புகள்..!

By vinoth kumarFirst Published Mar 2, 2021, 1:54 PM IST
Highlights

கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் கோட்டைவிட்டதால் இந்த முறை வேட்பாளர்கள் தேர்வில் அதிக கவனம் தேவை வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் கோட்டைவிட்டதால் இந்த முறை வேட்பாளர்கள் தேர்வில் அதிக கவனம் தேவை வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கி மார்ச் 19ம் தேதி அன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன்  தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மறுபுறம் திமுகவில் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

 இதில் பங்கேற்க ஆர்வமுடன் அண்ணா அறிவாலயம் நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களில் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். அதில்,  சில சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன. தலைவர் கடுமையா உழைக்கிறார். நிச்சயம் அவர் முதலமைச்சரா வரணும்னு எல்லோரும் ஆசைப்படுறோம். ஆனால் அதேசமயம் ஏற்கனவே செஞ்ச சில தவறுகளை மீண்டும் செஞ்சு கோட்டைவிட்டுடுவோமோன்னு பயமா இருக்கு என்கிறார்கள் சிலர். இவர்கள் பயத்திற்கான காரணங்களையும் விரிவாகவே விளக்கினர்.

கடந்த 2016இல் திமுக தோற்றதுக்கு மிக முக்கிய காரணங்கள் இரண்டு. முதல் காரணம், கூட்டணி கட்சிகளுக்கு அள்ளிக் கொடுத்தது, இரண்டாவது தவறான வேட்பாளர்களை களத்தில் இறக்கியது. திமுக சார்பிலும், கூட்டணி சார்பிலும் பலவீனமான வேட்பாளர்கள் களமிறங்கியதால் பல இடங்களில் திமுக கூட்டணி பலத்த அடி வாங்கியது. 

அவற்றில் சில தொகுதிகள்;-

 2011, 2016 தேர்தல்களில் விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ பதவிக்குப் போட்டியிட்டவர் தனசேகரன். தொகுதியில் செல்வாக்கானவராக இருந்தாலும், அவரால் வெற்றி பெற முடியவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் வி. என். விருகை ரவியிடம் 2,333 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதேபோல், பாபநாசம் தொகுதியில் துரைக்கண்ணுவிடம்  காங்கிரஸ் வேட்பாளர் டி.ஆர்.லோகநாதன் 24,365 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

மேலும், விருதாசலம் – பாவாடை கோவிந்தசாமி (திமுக), சிதம்பரம் – செந்தில் குமார் (திமுக), சீர்காழி – கிள்ளை ரவீந்திரன் (திமுக)
பூம்புகார் – ஷாஜகான் (முஸ்லீம் லீக்), மயிலாடுதுறை – அன்பழகன் (திமுக), ஏற்காடு – தமிழ்ச்செல்வன் (திமுக), நன்னிலம் – துரைவேலன் (காங்கிரஸ்)

இதுபோல் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் கோட்டைவிட்ட திமுக கூட்டணி, இந்த முறை வேட்பாளர் தேர்வில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதே உடன்பிறப்புகளின் கவலை. இதுபோன்ற தவறுகள் இந்த முறை நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் கோடிகளை அள்ளி இரைத்து ஐபேக் உடன் திமுக ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் யதார்த்தத்தில் அந்த ஐபேக் ஊழியர்கள் பலர் உள்ளூர் கட்சிக்காரர்களிடம் வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு, அவர்கள் சொல்லும் பெயர்களை பட்டியலில் சேர்த்துவிட்டதாக ஆங்காங்கே அதிருப்திக் குரல்கள் எழுகின்றன. ஆக, மீண்டும் அந்த லிஸ்டில் பழம்பெருச்சாளிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் இடம் பிடித்துவிட்டார்களாம். இதற்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே, எதற்கு இவ்வளவு களேபரம் என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

உதாரணத்திற்கு, கடலூர் தொகுதியில் 2011இல் வாய்ப்பு கொடுக்காததால் அதிமுகவிற்கு போய்விட்டு, மீண்டும் திமுக திரும்பிய ஐயப்பன், ஐபேக் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறாராம். கட்சிக்குள்ளேயே கடும் அதிருப்தியை சம்பாதித்திருக்கும் இவருக்கு சீட் கொடுத்தால் எப்படி ஜெயிக்க முடியும் என்கிறார்கள்.அதேபோல ஏற்காடு தனித்தொகுதியில், முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் பிடிக்க வேண்டியவர்களை பிடித்து, பட்டியலிலும் இடம்பிடித்து விட்டாராம். ஆனால் கடந்த முறையைவிட இந்த முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்றுவிடுவார் என்கிறார்கள். காரணம் இவர் நின்றால் ஓட்டுப்போடக் கூடாது என 15 மலைவாழ் கிராமங்களில் தீர்மானமே போட்டிருக்கிறார்களாம். 

அடுத்து உட்கட்சி பிரச்னையால் இளைஞரணி துணைத்தலைவர் பதவியை இழந்த மாறன், மலைவாழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சம்பாதித்த தங்கசாமி போன்றவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன. இவர்கள் மீதும் பல புகார்கள், பஞ்சாயத்துகள் இருக்கிறதாம். மற்றொரு உதாரணம் மயிலாடுதுறை. இதை மீண்டும் காங்கிரஸுக்கு கொடுக்காமல் திமுக நிற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் உடன்பிறப்புகள். வெற்றி வாய்ப்புள்ள இந்த தொகுதியில் குத்தாலம் அன்பழகன், மூவலூர் மூர்த்தி ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இருக்கிறதாம். ஆனால் இவர்கள் இருவருக்கும் தொகுதிக்குள் நல்ல பெயர் இல்லை. இதற்கு காரணம் கேட்டால், அடுக்கடுக்காக அடுக்கிக்கொண்டே போகிறார்கள்.

பாபநாசம் தொகுதி கடந்த முறை காங்கிரஸூக்கு கிடைத்ததால் அதிமுகவின் துரைக்கண்ணு எளிதாக வென்று விட்டார். இந்த முறையும் காங்கிரஸூக்கு கொடுத்தால் தோல்விதான் கிடைக்கும். அதேசமயம் திமுக வேட்பாளரை நிற்க வைத்தால் எளிதில் வென்று விட முடியும் என்கிறார்கள். மொத்தத்தில் திமுக தலைமை கடந்த முறை செய்த தவறுகளை இந்த முறை திருத்திக்கொண்டு சரியான வேட்பாளர்களை தேர்வு செய்தால் வெற்றி நிச்சயம். 

click me!