தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வரும் ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்பு கொடி காட்ட திமுக கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதனையடுத்து ஆளுநர் ரவிக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் - தமிழக அரசு மோதல்
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. கல்லூரி பட்டமளிப்பு விழா உள்ளிட்ட அரசு நிகழ்வுகளில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை ஆளுநர் வெளிப்படுத்துவதாக திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இதே போல ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட ஏராளமான மசோதாக்களும் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, சட்டம் ஒழுங்கு சரியில்லையென பேட்டி கொடுப்பது என தொடர்ந்து தமிழக அரசோடு மோதல் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது .
ஆளுநருக்கு கருப்பு கொடி
திமுக கூட்டணி எம்பிக்களும் கையெழுத்திட்ட குடியரசு தலைவரிடமும் புகார் மனுக்களை வழங்கியுள்ளனர். இதே போல மதிமுக ஆளுநருக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது. இதன் அடுத்தகட்டமாக ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட திமுக கூட்டணி கட்சியான மார்க்கசிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளது. கடலூரில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், சிதம்பரத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கடலூர் வழியாக சென்னை செல்லும் ஆளுநருக்கு எதிராக கடலூரில் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு அனைத்து கட்சிகள் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து ஆளுநருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்