சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி அமைச்சர் செந்தில் பாலாஜி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை இன்று அதிகாலை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
காவேரி மருத்துவமனையின் 7வது தளத்தில் உள்ள ஸ்கை வியூ என்ற அறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த அறுவை சிகிச்சை சுமார் 4 மணிநேரம் நடைபெறும் என கூறப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம் உத்தரவை அடுத்து அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு ஜூன் 13ம் அதிகாலையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இருதய பகுதியில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி அமைச்சர் செந்தில் பாலாஜி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை இன்று அதிகாலை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
அதன்படி காவேரி மருத்துவமனையின் 7வது தளத்தில் ஸ்கை வியூ அறையில் செந்தில் பாலாஜிக்கு அதிகாலை 5 மணிக்கு அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, செந்தில் பாலாஜிக்கு 5.30 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியது. இந்த அறுவை சிகிச்சையானது அதிகபட்சமாக 4 மணி நேரம் வரை நடைபெறும் கூறப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி 3 நாட்களுக்கு ஐசியூவில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார் என்றும் பிறகு 10 நாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.