
தமிழகத்தை பாதுக்காக்கவும் எடப்பாடியை ஆட்சியில் இருந்து தூக்கவும் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போரைத் தொடுக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எடப்பாடி தலைமையிலான அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 எம்.எல்.ஏக்கள் டிடிவி பக்கம் சென்று விட்டதால் முதலமைச்சரின் பெரும்பான்மை குறைந்துள்ளது.
இதனால் டிடிவி தினகரன் தரப்பு மற்றும் எதிர்கட்சியினர் ஆளுநரை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதைதொடர்ந்து திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், தாம்பரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, இரண்டு நாட்களுக்கு முன்னர் நான், எங்கள் கட்சியில் உள்ள சில எம்எல்ஏக்கள், காங்கிரஸ், இ.கம்யூ., கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஆளுநரை சந்தித்து தெரிவித்தோம் எனவும், ஆனால் அடுத்த நாள் விமானம் மூலம் ஆளுநர் மும்பைக்கு சென்றுவிட்டார் எனவும் குறிப்பிட்டார்.
அதனால்தான் நீதிமன்றத்தை நாடி வழக்குப்பதிவு செய்தோம் எனவும், நாளை அவ்வழக்கு விசாரணைக்கு வரும்போது ஜனநாயகத்தின் அடிப்படையில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
நிர்வாகத்தில் ஸ்தம்பித்து இருக்கும் தமிழகத்தை காக்க வேண்டும் என்றால், தமிழக மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் எனவும் மிகப்பெரிய போரை தொடுத்திட வேண்டும். எனவும் வேண்டுகோள் விடுத்தார்.