
திராவிட இயக்கத்தை அசைக்க எந்த கொம்பனாலும் முடியாது எனவும், தனிப்பட்ட நட்புக்காக திராவிட இயக்கத்தின் கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டிவி சேனல் விவாதம் தொடர்பாக பாஜகவின் எஸ்.வி.சேகர் வீடியோ ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதில் கூறியதாவது :
திமுக செயல்தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர் சட்டப்பேரவையில் இருந்தார். பாஜகவுக்கு எதிராக திமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிந்தேன். அதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டு கொண்டேன். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் என்னை ஃபோனில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டவரை தடுத்து நிறுத்தி விட்டேன் என தெரிவித்தார். அதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி.
இவ்வாறு அந்த வீடியோவில் எஸ்வி சேகர் பேசியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், திராவிட இயக்கத்தை அசைக்க எந்த கொம்பனாலும் முடியாது எனவும், தனிப்பட்ட நட்புக்காக திராவிட இயக்கத்தின் கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நூறாண்டு கால திராவிட இயக்கம் எந்த சமூக நீதிக் கொள்கையையும் சமநீதியையும் சமத்துவத்தையும் முன்வைத்துப் பாடுபடுகிறேதா அந்தக் கொள்கைகளுக்கு குன்றிமணி அளவிலும் குந்தகம் ஏற்படாத வகையிலும் பகுத்தறிவுடனும் சுயமரியாதையுடனும் தி.மு.க. தொடர்ந்து செயல்படும் என்பதில் எவருக்கும் எள்ளளவும் சந்தேகம் ஏற்பட வேண்டியதில்லை என தெரிவித்துள்ளார்.
சமரசம் செய்து கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், எந்தச் சூழலிலும் திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சான கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பேன் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.