
கலப்பட பால் குறித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க தனியார் நிறுவனத்திடம் பேரம் பேசினீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொங்கி எழுந்து ஆவேசமாக பதிலளித்தார்.
தனியார் பாலில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ரசாயனங்கள் கலப்படம் செய்வதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு புகாரை தெரிவித்தார்.
அதற்கு ஆதரமாய் இரண்டு தனியார் நிறுவனங்கள் தயாரித்த பாலை ஆய்வகங்களுக்கு அனுப்பி ஆதாரங்களையும் வெளியிட்டார். இதற்கு அந்த தனியார் பால் நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்தன.
இதனிடையே அதிமுகவை சேர்ந்த வைகை செல்வன், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கலப்பட பால் குறித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க தனியார் நிறுவனத்திடம் நீங்கள் பேரம் பேசியதாகவும் அவர்கள் மறுக்கவே நீங்கள் குற்றச்சாட்டை வெளியிட்டதாகவும் அரசியல் தலைவர்கள் புகார் தெரிவிப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதைகேட்ட ராஜேந்திர பாலாஜி ஆவெசத்துடன் கொந்தளித்தார். இது எல்லாம் ஒரு பொழப்பா, இதுமாதிரி கொச்சை படுத்தினால் உண்மையை யாராவது வெளியில் சொல்ல முன்வருவார்களா என பதில் கேள்வி எழுப்பினார்.