
ஊழல் அமைச்சரிடம் பணம் வசூலிங்கள்
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் ஜி.எஸ்.டி வரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்திய மத்திய மாநில அரசை கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார், 200 க்கும் மேற்பட்ட தேமுதிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர், பிரேமலதா விஜயகாந்த் ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில், " எங்களுடைய எல்லா நல்ல தருணங்கலும் மதுரையில் தான் அமைந்ததாக தெரிவித்தார். 100 க்கும், பீருக்கும் சோறுக்கும் கூடிய கூட்டம் இந்த கூட்டம் அல்ல என தெரிவித்தார். இது தானாக சேர்ந்த கூட்டம் என கூறினார். மத்திய, மாநில அரசுகள் மக்களை பாதிக்கும் வகையில் வரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார். கொரோனா பாதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின் கட்டணத்தை உயர்த்தியதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார். மத்திய,மாநில அரசிடம் நிதி இல்லை என்றால் முன்னாள், இன்னாள் அமைச்சர்களிடம் உள்ள ஊழல் பணத்தை வசூல் செய்தாலே எல்லா துறைகளையும் அரசு சிறப்பாக நடத்த முடியும் என தெரிவித்தார்.
கண்ணகியாகி அண்ணியாராக வருவேன்
ஆனால் மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மக்களிடம் வரி பணத்தை வசூல் செய்து மக்களை வஞ்சிக்கிறது என குற்றம் சாட்டினார். மின்கட்டணம் உயர்வு , சொத்து வரி உயர்வு என திமுக அரசு கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி கொண்டிருப்பதாக விமர்சித்தார். எப்படி நியாயம் கேட்டு கண்ணகி மதுரையை எரித்தாலோ,அது போல மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், கண்ணகியாகி நான் எல்லா இடங்களிலும் அண்ணியாராக வருவேன்" என கூறினார். மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு 80 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க இருப்பதாக திமுக தெரிவித்துள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டதாக கூறினார். இதனால் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை என திமுகவினர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். திமுக தலைவருக்கு பேனா சின்னம் வைக்க விரும்பினால், கட்சி அறக்கட்டளை சார்பில், அண்ணா அறிவாலயத்தில் வைக்கலாமே என பிரேமலதா தெரிவித்தார்.