இந்துக்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் ஒரு தவறு நடந்துவிட்டால் உடனே அப்பள்ளிகள் சூறையாடப்படுகிறது என்றும், ஆனால் கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் தவறு நடந்தால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை என்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார்.
இந்துக்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் ஒரு தவறு நடந்துவிட்டால் உடனே அப்பள்ளிகள் சூறையாடப்படுகிறது என்றும், ஆனால் கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் தவறு நடந்தால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை என்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நடத்தும் கல்லூரியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார், இதற்கு அமைச்சர் பொன்முடி பொறுப்பு ஏற்பாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபகாலமாக மாணவிகள் தற்கொலை என்பது தொடர் கதையாகி வருகிறது, இந்த வரிசையில் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது, அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து பலரும் பல வகையில் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் அர்ஜுன் சம்பத் பள்ளி மாணவிகள் விவகாரம் மதரீதியாக அழைக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று ராஜபாளையம் ரவுண்டானாவில் உள்ள சென்னை மாகாண முன்னாள் முதல்வராக இருந்த குமாரசாமி ராஜா அவர்களின் திருவுருவச் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து இல்லந்தோறும் தேசியக்கொடி உள்ளம் தோறும் தேசபக்தி என பிரதமர் அறிவித்துள்ள திட்டம் குறித்த முழக்கம் எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
சென்னை மாகாண முன்னாள் முதல்வராக இருந்த குமாரசாமி ராஜா பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம், தற்போது பள்ளிகளில் மாணவிகள் தற்கொலை விவகாரம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செயல்படவில்லை, மாறாக உதயநிதியின் ரசிகர் மன்ற தலைவராக செயல்படுகிறார். ஆசிரியர்களை மிரட்டும் நோக்கத்துடன் அவர் செயல்படுவதை கைவிட வேண்டும். ஒரு இந்துக்கள் நடத்தும் பள்ளியில் பிரச்சினை ஏற்பட்டால் உடனே அப்பள்ளிக் கூடம் சூறையாடப்படுகின்றன, இதே கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் பிரச்சனை ஏற்பட்டால் அது கண்டு கொள்ளப்படுவதில்லை, தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நடத்துகிற கல்லூரியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு அமைச்சர் பொறுப்பு ஏற்பாரா? சபாநாயகர் அப்பாவு அனைத்து மதத்தினருக்கும் சமமானவர் ஆக இருக்க வேண்டும்.
இவர் கிறித்தவ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மாற்று மதத்தினரை இழிவாகம் பேசுகிறார். சபாநாயகர் எப்போது ஒரு பொதுவான நபராக இருக்க வேண்டும். மற்ற மதத்தினரை படிப்பறிவு இல்லாதவர்கள் என்று பேசியுள்ளார், இதற்கு சபாநாயகர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் இல்லையென்றால் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கருப்பு கொடி காட்டுவோம். தமிழக முதலமைச்சரும் தொடர்ந்து இந்து பண்டிகைகளை புறக்கணித்து வருகிறார், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூற வேண்டும். இதனால்தான் அவரை அரசை இந்து விரோத அரசு என்று நாங்கள் கூறுகிறோம். அதேபோல் தமிழகம் முழுவதும் தமிழக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது.
எங்களது கருத்துரிமை பேச்சுரிமைகளை பறிக்கக்கூடாது, அதேபோல சபாநாயகர் அப்பாவு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரணம் என்று கூறுகிறார், அது மிகுந்த கண்டனத்துக்குரியது. மேலும் ராமசாமி மற்றும் திராவிட இயக்கத்தினரால் தான் காமராஜர் முதல்வரானார் என்று வரலாற்றை திரித்துக் கூறுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.