
ஓடும் குதிரை மீதுதான் பந்தயத்தில் பணம் கட்ட முடியும் என்பது அரசியலுக்கும் பொருந்தும். அதேபோல், ஜெயிக்கும் கட்சியில் பதவி பெற்றால்தான் சிறக்க முடியும்.
அந்த வகையில், தேமுதிக வின் எதிர்காலம் குறித்து கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரிய அளவில் நம்பிக்கை இல்லாததால், கட்சி பதவிகளை பெறுவதற்கு ஆர்வம் இல்லாமல் ஒதுங்குவதாக கூறப்படுகிறது.
தேமுதிக என்ற கட்சியை தொடங்கி, 2006 ம் ஆண்டு விஜயகாந்த் சட்டமன்ற தேர்தலை முதன்முதலாக சந்தித்த போது, அவர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால் தமிழகம் முழுவதும், அவர் கட்சி வாங்கி இருந்த வாக்குகள் அதிமுக தோல்வி அடைய வழி வகுத்தது.
அதேபோல், 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் தேமுதிக 10 சதவிகித வாக்குகளுக்குமேல் பெற்று, மற்ற கட்சிகளை அச்சுறுத்தியது. திமுக, அதிமுகவுக்கு மாற்று தேமுதிக என்று பேசும் அளவுக்கும் செல்வாக்கு பெற்று திகழ்ந்தது.
2011 சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்தார் விஜயகாந்த்.
அதுவரை, மற்ற கட்சிகளை அச்சுறுத்தி வந்த தேமுதிக, அதன் பிறகு படிப்படியாக நெருக்கடியையும், சரிவையும் சந்திக்க ஆரம்பித்தது. அக்கட்சி எம்.எல்.ஏ க்கள் பலர் தனியாக ஒதுங்கி, அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க ஆரம்பித்தனர்.
அதைத்தொடர்ந்து, கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்த தேமுதிகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலில், தேமுதிக நிர்வாகிகள் பலரை, திமுக தன் பக்கம் இழுத்து கொண்டு வந்தது. மறுபக்கம், தேமுதிகவை முன்னிலை படுத்தி அமைந்த மக்கள் நல கூட்டணி, படு தோல்வியை சந்தித்தது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் டெபாசிட் கூட பெறமுடியாமல் தோற்றார்.
அதைத்தொடர்ந்து, தேமுதிக, தமிழக அரசியலில் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தது. இந்நிலையில், தேமுதிகவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கிராமம் தொடங்கி கட்சியின் ஒவ்வொரு பகுதிக்கும் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான உள்கட்சி தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆனால், செலவு செய்ய தயங்குவதாலும், பிரச்சினை பலவற்றை எதிர்கொள்ள விரும்பாததாலும், கட்சி பதவிகளை பெறுவதற்கு யாரும் ஆர்வம் காட்டவில்லை என்றே கூறப்படுகிறது.
இதனால், முதல் கட்ட உள்கட்சி தேர்தலே இன்னும் முடிவடையாமல் உள்ளது. அதற்குள் இரண்டாம் கட்ட தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக வினர் கூறுகின்றனர்.
மத்தியில் ஆளும் கட்சியாக திகழும் பாஜக, கடந்த சட்டமன்ற தேர்தலில், கூட்டணி அமைப்பதற்காக, விஜயகாந்தை சந்தித்து பேச, எத்தனையோ தேசிய தலைவர்களை சென்னைக்கு அனுப்பும் அளவுக்கு தேமுதிக விளங்கியது.
தேமுதிக, தங்கள் கூட்டணிக்கு வரும் என்று திமுக தலைவர் கருணாநிதியே, கடைசி வரை காத்திருக்கும் அளவுக்கு வாக்கு வங்கியை கொண்டு திகழ்ந்தது தேமுதிக.
ஆனால், கடந்த ஒரே சட்டமன்ற தேர்தல், தேமுதிகவை இந்த அளவுக்கு புரட்டி போடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.