
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. சசிகலா தலைமையிலும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலும் இரு பிரிவாக பிரிந்த பிறகு, சசிகலா வின் கட்டுப்பாட்டில் இருக்கும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் சென்ற வாரம் வியாழக்கிழமையன்று சித்திரகுப்தன் பகுதியில் மோடியின் மூன்றாண்டு ஆட்சியைக் கடுமையாக விமர்சித்து கவிதை வடிவில் ஒரு விமர்சனக் குறிப்பு வெளியாகியிருந்தது.
"இது நாடு காக்கும் அரசா, மாடு காக்கும் அரசா?, சகலரும் வாழ்த்தும் அரசா, சமஸ்கிருதம் வளர்க்கும் அரசா? இது சாதனை அரசா? சி.பி.ஐ. சோதனை அரசா? மேக் இந்த இந்தியா? கிளீன் இந்தியா... என வாயாலேயே வடை சுடும் அரசா? பகவத் கீதைக்கு பல்லக்குத் தூக்கும் அரசா, பாரதத்தின் பன்முகத் தன்மையை போக்கும் அரசா?" என்று கேள்வியெழுப்பியதோடு, எப்படியோ மூச்சு முட்டப் பேசியே மூன்றாண்டு போச்சு, ஆனாலும் எந்திர தந்திர, மந்திரத்தை நம்பியே எகத்தாளத்தில் நடக்குது தாமரையின் வீச்சு" என்று மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியை பற்றி கடுமையாக விமர்சனங்களோடு வெளியானது.
தொடர்ந்து மத்திய அரசுக்கு அஞ்சி பழனிசாமி இருந்துவரும் நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் மோடி அரசுக்கு எதிராக வெளியான இந்த கருத்து பரபரப்பாக பேசப்பட்டது.
இதையடுத்து பாஜகவின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயத்தில் பழனிசாமி தரப்பு இன்று அமைச்சர் ஜெயக்குமாரை விட்டு விளக்கம் அளித்திருக்கிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், நமது எம்ஜிஆர் நாளேட்டில் வந்த கருத்து அதிமுகவின் கருத்து இல்லை என்றார்.
அதுமட்டுமல்ல நமது எம்.ஜி.ஆர் நாளேட்டுக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை என்று பெரிய குண்டை தூக்கிப்போட்டார். ஜெயக்குமாரின் இந்த அந்தர் பல்டி அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சரின் இந்த பதிலால் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதேபோல நமது எம்.ஜி.ஆர் நாளேடு தற்போது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறதென்ற கேள்வியும் தொண்டர்களிடையே எழுந்தது.
இந்நிலையில், இரட்டை இலையை மீண்டும் பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் கைதாகி திஹார் சிறையில் இருந்த தினகரன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடையே பேசுகையில், அதிமுக அதிகார நாளிதழான நமது எம்.ஜி.ஆருக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த தினகரன் "யாருக்கு? அவருக்கும் நமது எம்.ஜி ஆருக்குமா? ஜெயக்குமார் உலக மேதைகளில் ஒருவர். அவர் சொல்கிற கருத்துக்கு பதில் சொல்கிற அளவுக்கு எனக்கு தகுதி இருக்கிறதாக நான் நினைக்கவில்லை. அவருடைய தகவல்களுக்கு அவர் உயரத்தில் உள்ளவர்கள் தான் பதில் சொல்லவேண்டும் என்றார்.
மேலும் அதிமுக அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் பன்னீர் மற்றும் உங்களின் பேனர் அகற்றப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும் என்றார்.