
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சுயேட்சை வேட்பாளர் தினகரன் ஆகியோரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமாரும் வந்திருந்தார்.
வேட்புமனு தாக்கல் செய்ததற்குப் பின்னர் மதுசூதனனும் அமைச்சர் ஜெயக்குமாரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டி காப்பாற்றப்பட்ட இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிடும் தினகரன், அதிமுக கொடியை பயன்படுத்த அருகதை அற்றவர். இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயர், கட்சி கொடி ஆகியவற்றை ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையிலான அதிமுகதான் பயன்படுத்தலாம் என தெளிவாக உறுதிப்படுத்திய பிறகும், வேட்புமனு தாக்கலின்போது அதிமுக கொடியை சட்டவிரோதமாக தினகரன் பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது.
இதுதொடர்பாக சட்டரீதியாக தினகரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய 5 பேர் மட்டும் தான் வரவேண்டும். ஆனால் கூட்டம் காட்டுவதற்காக சட்டவிரோதமாக வெளியூரிலிருந்து 100க்கும் அதிகமானோரை தினகரன் வரவழைத்துள்ளார். இதுதொடர்பாக புகார் அளிக்கப்படும்.
உரிக்க உரிக்க வெங்காயத்தில் ஒன்றுமே இல்லாதது போல், தினகரன் அணியும் விரைவில் காலியாகும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவே, 39537 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். இந்நிலையில், மதுசூதனன் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் 45000 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.