மோடி ஜெய்ஹிந்த்புரத்தில் வாடகை வீடு எடுத்து தங்கினாலும் பாஜக தமிழகத்தில் டெபாசிட் கூட வாங்க முடியாது- லியோனி

By Ajmal Khan  |  First Published Apr 2, 2024, 9:24 AM IST

சாமி கும்பிடும் சூடத்திற்கு வரி விலக்கு கொடுத்த கலைஞர் எங்கே? சாமி கும்பிட சூடத்திற்கு வரி போட்ட பிரதமர் மோடி எங்கே என கேள்வி எழுப்பிய லியோனி, இந்தியா கூட்டணியை கண்டு தோல்வி பயத்தில் தூங்காமல் மீண்டும் மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி என விமர்சித்தார். 
 


ஸ்டாலின் கை காட்டும் நபர் பிரதமர்

மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் வெங்கடேசன் அவர்களை ஆதரித்து இன்று மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனோடு பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு திண்டுக்கல் ஐ லியோனி அவர்கள் வாக்குகள் சேகரித்தார். அப்போது பேசிய அவர், வரும் ஜூன் 5ம் தேதி இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலின் கை காட்டும் நபர் தான் பிரதமராக போகிறார். உலகமே நன்றிக்கடன் பட்டுள்ளது. நான் பிஎஸ்சி எம்எஸ்சி படித்து பட்டம் பெற்றதற்கு காரணம் பிடிஆரின் தாத்தா ஒரு காரணம். பிடிஆரின் தாத்தா மற்றும் தந்தையால் லட்சக்கணக்கான பட்டதாரிகள் உருவாகி உள்ளனர். 

Tap to resize

Latest Videos

தனிவிரலாக எடப்பாடி

வெளிநாட்டில் கல்வி கற்றாலும் என் கல்வியை தமிழகத்திற்கு தான் பயன்படுத்துவேன் என பணியாற்றி கொண்டிருப்பவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். குறிப்பாக பெண்கள் படிக்கக்கூடாது. மருத்துவம் பார்க்கக்கூடாது என பின்தங்கிய நிலையில் வைத்திருந்தனர். ஆனால் ஒரு பெண்ணால் ஆட்சியராக ஐஜியாக டிஐஜியாக இருக்க முடியுமென்றால் அதற்கு திராவிடம் தான் காரணம். 10 ஆண்டுகள் நம்மை ஏமாற்றி பின்தங்கிய நிலையில் வைத்திருக்கிறார் மோடி.

ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என யார் தான் பழனிசாமிக்கு வசனம் எழுதிக்கொடுப்பது என தெரியவில்லை. கட்டை விரல் ஜெயலலிதா, மோதிர விரல் சசிகலா, நடுவிரல் ஒபிஎஸ், சுண்டுவிரல் பாஜக என எல்லோரையும் விட்டுவிட்டு தனிவிரலாக நிற்கிறார் பழனிசாமி. முதல்வரை பார்த்து கை நீட்டி பேசுவதற்கு தகுதியில்லாதவர் பழனிசாமி என விமர்சித்தார். 

தோல்வி பயத்தில் மோடி

கொள்கையோடு அமைந்த அற்புத கூட்டணி இந்தியா கூட்டணி. சாமி கும்பிடும் சூடத்திற்கு வரி விலக்கு கொடுத்த கலைஞர் எங்கே? சாமி கும்பிட சூடத்திற்கு வரி போட்ட பிரதமர் மோடி எங்கே. நாய்க்கு சோறு போடுவதையே புண்ணியம் என பார்க்கும் ஊரில்,வெறும் வயிற்றில் வரும் மாணவர்களின் நிலையை பார்த்து சோறு போட்டவர் முதல்வர் ஸ்டாலின். இந்தியா கூட்டணியை கண்டு தோல்வி பயத்தில் தூங்காமல் மீண்டும் மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி. பிரதமர் மோடி ஜெய்ஹிந்த்புரத்தில் வாடகை வீடு எடுத்து தங்கினாலும் தாமரை சின்னம் தமிழகத்தில் டெபாசிட் கூட வாங்க முடியாது என லியோனி தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

தைரியம் இருந்தால்,திராணி இருந்தால் இங்கே வந்து பேசுங்கள்!பிரச்சாரத்தில் வாக்காளருடன் மோதிக்கொண்ட திமுக எம்எல்ஏ

click me!