
தங்களுக்குள் ஆயிரம் பிரச்னைகள், பஞ்சாயத்துக்கள், வாய்க்கால் வரப்பு தகராறுகள் இருந்தாலும் கூட தினகரன் விஷயத்தில் மட்டும் கைகோர்த்து நின்று எதிர்ப்பதில் தெளிவாக இருக்கின்றனர் பன்னீரும் - பழனிசாமியும்.
இரட்டை இலை சின்னம் தனக்கில்லை! என்றான நிலையில் அ.தி.மு.க. கொடியை கெட்டியாக பிடித்துக் கொண்டே இருக்கிறார் டி.டி.வி. தினகரன். சின்னம் குறித்த தீர்ப்பு வெளியான சமயத்தில் மேற்கு தமிழகத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தார். அப்போது அவரது காரில் அ.தி.மு.க. கொடிதான் இருந்தது. ஆனால் அதை எடப்பாடி - பன்னீர் தரப்பு பெரிதாய் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் தீர்ப்பு வெளியாகி சில நாட்கள் ஆன பிறகும் இன்னமும் அப்படியேதான் வலம் வருகிறார்கள் என்கிறார்கள். திருச்சியில் தான் நடத்திய ஆலோசனை கூட்டத்துக்கு இப்படித்தான் அ.தி.மு.க. கொடி கட்ட்சிய காரில் வந்திறங்கியவர், “நமது துரோகிகளை அடையாளம் காணும் தேர்தல்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். உங்கள் அனைவரின் ஆதரவுடன் நான் வேட்பாளராக களமிறங்குகிறேன்.
தேர்தலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அவற்றை நாம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர். முதன்முதலில் தேர்தலைச் சந்தித்தபோது இரட்டை இலை சுயேச்சை சின்னமாகத்தானிருந்தது. இப்போது நானும் சுயேட்சை வேட்பாளர்தான். அதனால் தலைவரின் வழியில் வெற்றிக்கு வித்திடுவோம்.” என்று பட்டாசாய் வெடித்திருக்கிறார்.
இந்நிலையில் உள்ளே தினகரன் அதிதீவிர ஆலோசணையில் இருந்தபோது வெளியே அவரது காரிலிருந்த அ.தி.மு.க. கொடியை கழற்ற சொல்லி பிரச்னை செய்தார்களாம் சில அ.தி.மு.க.வினர். ஆனால் அதற்கு ‘கொடியை பயன்படுத்த கூடாதுன்னு நீதிமன்றம் எதுவும் சொல்லலையே!’ என்று அவரது ஆதரவாளர்கள் மறுத்துவிட்டனராம்.
தினகரன் போகுமிடமெல்லாம் இந்த கொடி விவகாரம் மோதலை கிளப்பிக் கொண்டே இருக்கிறது. இந்த கருத்து மோதல் கைகலப்பு, கல்லெறி, கலவரம் என்றாகிவிட கூடாது என்று பாவம் போலீஸ்தான் தலையில் வைக்கிறது. ஆனால் அப்படியொன்று நடக்கட்டும் என்றுதான் டி.டி.வி. தரப்பு எதிர்பார்ப்பதாக அ.தி.மு.க.வினர் கடுகடுக்கிறார்கள்.
கலகம் வந்தால்தான் தெளிவு பிறக்கும்! என்பார்கள்.