
மாநில வளர்ச்சி பற்றிய பிரக்ஞை எதுவுமில்லாமல் உட்கட்சி பூசல் குட்டையில் நாட்கணக்கில் மீளாமல் அ.தி.மு.க. ஊறிக் கொண்டே இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் ஆசிர் விமர்சனங்களை வீச துவங்கியுள்ளனர்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் பிளவு பட்ட அ.தி.மு.க. தினம் தினம் புதுப்புது உட்கட்சி பிரச்னைகளை கிளப்புவதாகவும், அதை தீர்ப்பதிலேயே ஆட்சியின் ஆயுளை கழிப்பதாகவுமே இருக்கிறது என்பதே தமிழக மக்களின் குற்றச்சாட்டு.
எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து வெற்றிகரமாக நடத்திய பொதுக்குழுவுக்கு பின் அ.தி.மு.க. எனும் மாபெரும் கட்சியின் பெரும்பான்மையானது இவர்களின் வசம்தான் இருக்கிறது எனும் பிம்பம் உருவானது. இந்த பிம்பத்தை விஸ்வரூபமாக்கி காட்டி, தினகரன் பின்னால் நிற்கும் 21 எம்.எல்.ஏ.க்களை இழுக்க துடிக்கிறது பழனிசாமி மற்றும் பன்னீர் அணி.
ஆனால் பொதுக்குழுவை தடுக்கும் தனது முயற்சி தோற்றதால் ஈகோ பிரச்னையில் சிக்கியிருக்கும் தினகரன் முன்பை விட வெகு தீவிரமாக பழனி மற்றும் பன்னீர் அணிக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்.
இந்த ஆதங்கம் உச்சத்துக்கு போயிருக்கும் நிலையில் நேற்று “எங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்களை போலீஸை வைத்து மிரட்டுகிறது ஆளும் அணி.
துவக்கத்தில் பேரம் பேசிப்பார்கிறார்கள். இருபது கோடி ரூபாய் தருகிறோம், 30 கோடி தருகிறோம் என்று விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் பணத்துக்கு மடியாத பட்சத்தில் முதல்வர் பழனிசாமியின் அரசை ஆதரிக்கவில்லை என்றால் வழக்கு போட்டு உள்ளே தள்ளுவோம் என்று மிரட்டுகிறார்கள்.
இது குறித்து எங்கள் எம்.எல்.ஏ.க்கள் போலீஸில் புகார் செய்ய உள்ளார்கள். போலீஸை வைத்து எங்கள் தரப்பை மிரட்டும் முதல்வர் பழனிசாமி மீது வழக்கு தொடர்வோம் நிச்சயமாக.
பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் வரும்போது தோற்றுப்போவோம் என்பது தெரிந்தே, அந்த பயத்தாலேயேதான் பழனிசாமி இந்த மாதிரியான காரியங்களை செய்கிறார். ஆனால் அவருக்கு ஒன்று சொல்கிறேன், இப்போது எங்கள் தரப்பில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமில்லை, அவர் தரப்பில் அமர்ந்திருக்கும் எங்களது ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ.க்களும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எங்களுக்கு சாதகமாக வாக்களிப்பார்கள்.
பொதுக்குழு முடிவுக்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடையாது. ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன், ஓட்டெடுப்பின்போது கட்சியை காப்பாற்ற நான் கூறும் முடிவை எங்கள் எம்.எல்.ஏ.க்கள் எடுப்பார்கள். கட்சியை காப்பாற்ற எந்த முடிவையும் எடுக்க தயங்கிட மாட்டேன்.” என்று போட்டுப் பொளந்துள்ளார்.
பொதுக்குழுவை இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்தி முடித்த பின்னும், மீண்டும் மீண்டும் தினகரனின் இந்த அடங்காத பேச்சு ஆளும் அணியை அதிர வைத்துள்ளது.
எனவே அடுத்து தினகரனையே கார்னர் செய்யும் வகையில் ஏதாவது வழக்கு விவகாரங்களை கையில் எடுக்கலாம் என்று தெரிகிறது.
இப்படி இரண்டு தரப்பும் உள்ளடி அரசியல் பஞ்சாயத்துக்களிலேயே காலம் தள்ளிக் கொண்டிருப்பதால் சவலை பிள்ளையாக தேய்ந்து கொண்டே போகிறது தமிழக வளர்ச்சி.
இதை தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் மத்திய அரசு, ஏன் மெளனம் காக்கிறது என்பதும் ஊரறிந்த ரகசியம்!