
தினகரன் சொல்வது எதையும் முதல்வர் எடப்பாடி கேட்பது இல்லை. அவர் போக்கிலேயே, முதல்வர் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
ஆனால், இருவருக்கும் இடையே எழுந்த மோதலுக்கான காரணம் எதுவும் வெளியில் தெரியாமலே இருந்தது.
ஆனாலும், தினகரனுக்கு எதிராக நடந்த அமைச்சர்கள் கூட்டம், எடப்பாடியின் ஒப்புதலுடன்தான் நடந்திருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று, முதல்வர் எடப்பாடிக்கு டெல்லியில் இருந்து தகவல் வந்துள்ளதாக, சிலர் தினகரனிடம் கூறியுள்ளனர்.
இதை அடுத்து, பல முறை முதல்வரின் செல்போனுக்கு தினகரன் தொடர்பு கொண்டும், எடப்பாடி போனை எடுக்கவே இல்லை.
இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை காலை மீண்டும் எடப்பாடிக்கு போன் போட்டிருக்கிறார் தினகரன். அப்போது போனை எடுத்த முதல்வரின் உதவியாளர், முதல்வர் மிகவும் பிசியாக இருப்பதாக கூறி இருக்கிறார்.
அதை கேட்டு கோபமடைந்த தினகரன், அவர் மட்டும்தான் பிசியா, நாங்கள் எல்லாம் வேலை வெட்டி இல்லாமல் சும்மா இருக்கிறோமா? என்று பேசிவிட்டு போனை துண்டித்து இருக்கிறார்.
அடுத்த சில நிமிடங்களில், எடப்பாடி போன் மூலம் தொடர்பு கொண்டு தினகரனிடம் பேசி இருக்கிறார். அடுத்த நொடியே, இருவருக்கும் கார சாரமான வாக்கு வாதம் தொடங்கி இருக்கிறது.
அதே டென்ஷனுடன், ஊரில் இருக்கும் தமது அண்ணனுக்கு போன் போட்டு புலம்பி இருக்கிறார் எடப்பாடி. அவர் அண்ணனோ, உடனே அந்த தகவலை கேரளா ஆளுநரும், தமது உறவுக்காரருமான சதாசிவத்திடம் சொல்லி இருக்கிறார்.
இதை அடுத்து, எடப்பாடியை போனில் தொடர்பு கொண்ட சதாசிவம், அரசியலில் எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆகக் கூடாது என்று அறிவுரை வழங்கி, மேலும் சில ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார்.
அதன் பிறகு நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில்தான், தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு வெளியேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.