
தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை என அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அடையார் வீட்டில் அமைச்சர்களுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொண்ட பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதற்காகவும், அமைச்சர்களுக்கு வாழ்த்து கூற மட்டுமே இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும் தற்போது நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக விவாதிதாக கூறினார்.
இந்நிலையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீது வருமான வரித்துறையினர், விசாரணை மட்டுமே நடத்தியுள்ளனர் என்றும் எந்த வித ஆதாரமும் அவரிடம் இருந்து கைப்பற்ற படவில்லை எனவே அவரை பதவி நீக்கம் செய்ய எந்த அவசியமும் இல்லை என்றார்.
மேலும், விஜயபாஸ்கர் ஏன் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை? என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தினகரன் என்னிடம் தமிழ் புத்தாண்டை கொண்டாட தன்னுடைய சொந்த ஊருக்கு செல்வதாக கூறி விட்டுத்தான் விஜயபாஸ்கர் சென்றார் என்றும், அதனால் தான் இந்த கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், வருமான வரி துறையினரிடம், சிக்கியுள்ள ஆவணம் என்று வாட்ஸ் ஆப்பில் வெளிவந்ததை ஊடகங்கள் வெளியிட்டன, உண்மையில் அது போன்ற ஆவணங்கள் எதுவும் இல்லை என்கிறார்.
வருமான வரி சோதனை மத்திய அரசு உத்தரவால் நடத்தப்பட்டதா என்பது எனக்கு தெரியாது என்றும் 'இரட்டை இலை'யை மீட்பது தான் தங்களுடைய அணியின் முதல் வேலை என தெரிவித்தார்.