
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு மைனாரிட்டி அரசு என்பதை தேர்தல் ஆணையமே தெரிவித்துவிட்டது என தினகரனும் தங்க தமிழ்ச்செல்வனும் கூறியுள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, சசிகலாவிற்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, அவரது தலைமையில் தனி அணி செயல்பட்டது.
அப்போது, சசிகலாவின் அணியில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், தினகரன் ஆகியோர் இருந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, சசிகலாவின் அணி சார்பில் தினகரனும் பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனும் போட்டியிட்டனர். அப்போது, இருதரப்பினரும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரியதால், இரட்டை இலை சின்னத்தையும் கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, தங்கள் அணி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோடி பன்னீர்செல்வம் அணி கோரியபோது, 11 எம்.எல்.ஏக்கள் அந்த அணியில் இருந்தனர். அப்போது பன்னீர்செல்வம் அணியும் சசிகலா அணியும் இரட்டை இலை சின்னத்தை கோரியதால் சின்னம் முடக்கப்பட்டது.
இதையடுத்து பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்தபிறகு தங்களுக்கு இரட்டை இலையை ஒதுக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். இதுதொடர்பாக பழனிசாமி தரப்பு மற்றும் தினகரன் தரப்பு ஆகிய இருதரப்புகளின் வாதங்களையும் கேட்டறிந்த தேர்தல் ஆணையம் சின்னத்தை பழனிசாமி அணிக்கு ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், பழனிசாமி அணிக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. ஆனால் தினகரன் அணிக்கு தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உட்பட 20 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. அதேபோல, தினகரன் அணிக்கு 6 எம்.பிக்களின் ஆதரவும் பழனிசாமி அணிக்கு 42 எம்பிக்களின் ஆதரவும் உள்ளது. அதிகமான நிர்வாகிகளின் ஆதரவின் அடிப்படையில் சின்னம் பழனிசாமி அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், 111 எம்.எல்.ஏக்கள் முதல்வர் பழனிசாமி அணியில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஆட்சியமைக்க தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு முதல்வருக்கு இல்லை என்பதை தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டுவிட்டது. இதிலிருந்து, முதல்வருக்கு அறுதி பெரும்பான்மை கிடையாது என்பதை தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டுவிட்டது. இனியாவது முதல்வர் பழனிசாமி மீது சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தினகரன் தெரிவித்தார்.
இதே கருத்தை தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வனும் தெரிவித்துள்ளார்.