
தினகரனும் எடப்பாடி பழனிச்சாமியும் நாடகம் நடத்துவதாகவும் தினகரனை பார்க்க சென்ற எம்.எல்.ஏக்கள் மீது எடப்பாடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஒ.பி.எஸ் அணியை சேர்ந்த கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை விவகாரத்தில் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறைக்கு சென்று வெளியே வந்தார்.
அப்போது கட்சி பணிகளில் மீண்டும் பணியாற்றுவேன் என தெரிவித்தார். ஆனால் அதற்கு எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
தினகரன் கட்சியில் இருந்தால் ஒ.பி.எஸ் அணியினர் இணையமாட்டார்கள் என அமைச்சர்கள் முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
எனவே ஆலோசனைக்கு பிறகு ஏற்கனவே டிடிவி அறிவித்தபடி கட்சியை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
மேலும், தினகரனை அதிமுகவை சேர்ந்த யாரும் சென்று பார்க்கமாட்டார்கள் என உறுதியளித்தார்.
பின்னர், சசிகலாவை சிறையில் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி அதிமுகவில் இருந்து என்னை விலக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் இன்னும் 6 மாத காலம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு என் பணிகளை தொடர்வேன் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, திடீரென அதிமுகவை சேர்ந்த 30 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் ஜெயக்குமாரின் பேச்சுக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனால் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் எடப்பாடி தலைமையிலான அரசு இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதற்கு பதிலளித்து பேசிய ஒ.பி.எஸ் எங்களால் கட்சிக்கு எந்த பாதிப்பும் வராது எனவும் ஆட்சி கவிழாது எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் தினகரனும் எடப்பாடி பழனிச்சாமியும் நாடகம் நடத்துவதாக ஒ.பி.எஸ் அணியை சேர்ந்த கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்திக்கையில், தினகரனும் எடப்பாடி பழனிச்சாமியும் நாடகம் நடத்துவதாகவும் தினகரனை பார்க்க சென்ற எம்.எல்.ஏக்கள் மீது எடப்பாடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் தினகரனுடன் தொடர்பு வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இப்போது என்ன சொல்ல போகிறார் என கேள்வி எழுப்பினார்.
சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து நீக்கும் வரை இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், சசிகலா கட்டுப்பாட்டில் தான் ஆட்சி நடைபெறுவதாகவும் முனுசாமி குற்றம் சாட்டினார்.
ஒ.பி.எஸ் எடப்பாடியுடன் இணையும் தருவாயில் உள்ள இந்த நேரத்தில் எடப்பாடியை ஒ.பி.எஸ்சுடன் மூட்டி விடுவது போன்று முனுசாமியின் பேச்சு அமைந்துள்ளது.