
வாய்தா கேட்கும் வழக்கறிஞர்களை வைத்து வாதாடி, காவிரியில் தமிழகத்திற்கான உரிமையை இழந்துவிட்டோம் என திமுக முதன்மை செயலாளரும் எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரித்த நடுவர் மன்றம், தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
தமிழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், 192 டிஎம்சி போதாது. எனவே கூடுதலாக 72 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவா ராய், கான்வில்கர் அடங்கிய அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.
இந்நிலையில், நூற்றாண்டுகள் கடந்தும் தொடர்ந்து வந்த காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது. தமிழகத்தில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் உள்ளது. எனவே தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என தீர்ப்பளித்தது.
காவிரியிலிருந்து கூடுதல் நீர் தமிழகத்திற்கு கிடைக்கும் வகையில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருந்ததையும் உச்சநீதிமன்றம் குறைத்திருப்பது தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், காவிரி வழக்கின் தீர்ப்பு என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 192 டிஎம்சி நீரை பெற்றுத்தந்தவர் கருணாநிதி. அதையும் இழக்க வைத்திருக்கிறது அதிமுக அரசு. உச்சநீதிமன்றத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவரம் அறிந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடவில்லை. நடுவர் மன்றத்தில் வாய்தா கோரும் வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வழக்கை குளறுபடி செய்துள்ளது அதிமுக அரசு. இந்த வழக்கில் தமிழகத்திற்கான காவிரி நீர் குறைக்கப்பட்டிருப்பதற்கு அதிமுக அரசுதான் காரணம் என துரைமுருகன் குற்றம்சாட்டினார்.